சுமீத் சமோஸ்

ராப் எனப்படும் சொல்லிசையை மொழிபெயர்ப்பதென்பது அர்த்தமற்றதாகவே தோன்றியது. எந்த இசைப் பாடல் வரிகளை மொழிபெயர்ப்பதும்கூட. அது ஒரு கூட்டு அனுபவத்தின், ஒற்றைச் சரடை மட்டும் பிரித்தெடுப்பது. எனினும், சுமீத் சமோஸ்வானம்’ நிகழ்ச்சியில் சென்னையில் பாடும்போது, மேடையில் பின்னணியில் ஓடவிடுவதற்காக ஆறு பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. சுமீத்தின் படுவேக சொல்லிசையில் அதை யாரும் கவனித்திருப்பது கடினமே, என இப்போது தோன்றுகிறது. ஆனால் பிரித்தெடுக்கப்பட்டவை வெறுமனே இசையற்ற பாடல்வரிகளாக மட்டுமே இல்லை. எனவே அவற்றில் மூன்று இங்கே.

புனைவுகளும், கட்டுரைகளும் மொழிபெயர்க்கப்படும்போது நிகழாத ஏதோ ஒன்று கவிதை மொழிபெயர்க்கையில் நிகழ்கிறது. அதனாலேயே அங்கே மொழிபெயர்ப்பு, எளிய வரையறைகளுக்கும் நிகழ்வதில்லை. ஒரு சொல்லிசைப் பாடலை மொழிபெயர்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால் பல கேள்விகள் இருக்கின்றன. எதற்காக செய்கிறோம்? எதை முதன்மைப்படுத்துவது? இங்கே அது மீண்டும் சொல்லிசையாக நிகழ்த்தப்படப் போவதில்லை. ஆனாலும் வெறும் பனுவலாக வாசிக்கையிலும், அதில் அந்த தாளத்தை வாசிப்பவரை உணரவைக்க முடியுமா என்ற முயற்சி இருக்கிறது. பாடல்வரிகள் அர்த்தம், தாளத்தின், பாடகரின் துணையின்றி நிற்கையில், எழுத்தாளராக, கவிஞராக சுமீத்தின் திறனும், சொல்லிசைக்கும் கவிதைக்குமான ஊடாடலும் மேலும் கவனப்படுத்தப் படுகிறது.

From Sumeet Samos’s Facebook page

ஒரிய, இந்தி மொழிப் பாடல்கள், சுமீத் கொடுத்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவை.

1.

தெசியா பிலா, நேரா கோராபுட்ல இருந்து, ஏரியா காலி
(மண்ணுல இருந்து வந்தவன் நானு, இடத்த உரிமைகோர வந்திருக்கேன்)

ரொம்ப நாளா, அமைதியாதான் இருந்தேன்
ஆனா அதுக்கு பேச வேணாம்னு அர்த்தமில்ல.
ஒரு வருசம், என் டிகிரிய எனக்கு கொடுக்கல.
எதிர்கொண்டேன் கல்லுாரியின் ஒடுக்குமுறை.
ஆனா இப்போ என்ன தடுக்கமுடியாது
வர்றேன் நானும் இடத்த புடிக்க
வேகமா அவங்கள காலி பண்ண

தெசியா பிலா, நேரா கோராபுட்ல இருந்து, ஏரியா காலி

நா எங்கிருந்து வர்றேன் தெரியுமா
சிஆர்பிஎஃப்-மாவோயிஸ்ட் பிரச்சனை
சாதிக் கொடுமை, பிராமணன், சுண்டி, கோம்தீ.
கார்ப்பரேட் நிலத்த புடுங்குவான், வேதாந்தா, நியாம்கிரி.
கட்டாய இடமாற்றம். வீடில்ல. உடமையுமில்ல.

கல்வியில்ல. மருத்துவமில்ல.
நிலமில்ல. வளமில்ல.
தொடர்பும் இல்ல.
உருத்துச்சு என்னோட மனச.

தெசியா பிலா, ஏரியா காலி

ஒரு வருசம்தானே ஆச்சு, இங்லீஷ்ல இந்தில ராப் பாடத் தொடங்கி.
சீனுக்கு நான் புதுசு
ஆனா ஆரம்பிச்சாச்சு சாதி பத்தின பேச்சு
என் கனவுகள் பெரிது. ஆதரவோ சிறிது.

நெஞ்சில் இருக்குது உறுதி. நிற்காது எந்தன் கால்கள்.
எழுதும்போது முன்னிருக்குது அம்பேத்கரின் புகைப்படம்.
நீ 24 கேரட்டு சுத்தத் தங்கமுன்னா
நான் கோராபுட்டின் சுத்தக் கட்டிக் கரிதான்.

தெசியா பிலா, ஏரியா காலி

மனசுல அழுத்தி வைச்சிருக்கேன் எக்கச்சக்க கதைகள்.
கேட்டிருக்கேன். பார்த்திருக்கேன். அனுவிச்சிருக்கேன்.
சண்டையும் போட்டிருக்கேன்.
எனக்காக ராப் பாடல. எங்களுக்காக பாடுறேன்.
கொஞ்ச நாளு ஆகும்தான்.
கொஞ்ச கொஞ்சமா இந்த உண்மைகள
வெளிச்சம்போட்டு நான் காட்டுவேன்.

சொல்லுவாங்க அவங்க,
கருத்த மேகம் பொழியாதாம், குரைக்கிற நாய் கடிக்காதாம்.
ஆனாலும் இன்னிக்கு,
அந்த நாயும் கடிக்கும் பார். கருத்த மேகம் பொழியும் பார்.

நான் தெசியா பிலா, தெற்கு ஒடிசாக்காரன்.
கோராபுட்டில் இருந்து வர்றேன்
ஒடிசாவின் கலாச்சாரமான சமூகத்துக்கு,
நாங்க நாகரீகம் இல்லாதவங்க, காட்டுவாசிங்க
மாவோயிஸ்டு பிரச்சனையோட மையம் அவ்ளோதான்
அவங்க மேப்ப தாண்டி வர சொல்லு
கானா பாஜா, சோய்த் போரோப், மாண்டியா பேஜ்,
தேம்ஸா, மச்சுகுந்த், இந்திராவதி, தியோமலி, கோலாப் எல்லாம்
எங்களுக்கென்ன தெரிஞ்சுகிட்டு புரிஞ்சுக்க சொல்லு

தெசியா பிலா, ஏரியா காலி

2.

போராட்டம் பழகு

பொறந்ததில் இருந்து என்ன க்ரிமினல்னு சொன்ன
நானும் கேக்குறேன், எதுக்கு ஆயிரம் சாதி?
அடிமைகள் சந்தையில நா சுதந்திரமா இருக்கதா சொல்ற
ஏன் பின்ன மனுசக் கூட்டத்துல
மேலயும் கீழயும்

உன்கிட்ட இருக்கு இதுக்கு பதில்
ஆனா நீ எதுவும் செய்யமாட்ட
ஏன்னா நீதான் குற்றவாளி
என்ன பத்தி நீயும் நினைப்பது
உன் சாதிப் பேச்சுல தெரியுது
நடுராத்திரி நீ வாங்கின சுதந்திரம்
எரிக்குது அழிக்குது என்னோட சேரிய

இன்னும் பாக்க என்ன இருக்கு சொல்லு?
என் மக்களுக்கு சொல்றேன்
சாவத் தாண்டி நாம வாழணும்
போராட்டத்துக்கு பழகணும்
ஆமா, சாவத் தாண்டி நாம வாழணும்
போராட்டத்துக்கு பழகணும்.

என் கருத்த தோலு முன்ன
உன் வெள்ளையில் ஒண்ணும் இல்ல
ஒடுக்குவோருடன் சண்ட போட
என் முன்னோர்  கற்றுத் தந்தனர்
மீட்சிக்கென் வழிமுறைகள் புதிது

என் மக்களைத் திரட்டி
நம் இருப்புக்காக
தூரங்கள் குறைத்து
தடைகள் அவை உடைத்து
வா, டேக் இட் ஈஸி…

ரோஹித், முத்து, நிஷா, டெல்டா
இளவரசன், சங்கர், கெவின், அனிதா
லக்ஷ்மண்புரா, பதனிடோலா, கரம்சேடு, சுண்டுரு
மர்ச்சிஜாபி, காந்தமால், ஊனா, மிர்ச்பூர்

இன்னும் பாக்க என்ன இருக்கு சொல்லு
என் மக்களுக்கு சொல்றேன்
சாவத் தாண்டி நாம வாழணும்
போராட்டத்துக்கு பழகணும்
ஆமா, சாவத் தாண்டி நாம வாழணும்
போராட்டத்துக்கு பழகணும்

நம்ம வளங்கள எல்லாம் திருடிட்டாங்க
அட்டையப் போல உரிஞ்சிட்டாங்க
பங்க எல்லாம் பிடிங்கிட்டாங்க
இவங்க புத்தகத்துல படிக்கிறத
தெனம் தெனம் வாழறோம் நாம
இயல்பான ஞானம் என்ன தெரியணுமா
கத்துக்கணும் அவங்க நம்மகிட்ட.

இந்த ராப்பர்கள் கூட்டத்துல
நம்ம இடத்த உருவாக்குவோம்
இனி கேட்க, கெஞ்சப் போறதில்ல
நம்மளோடத நாம புடிங்கிப்போம்
ஆமா, இனி கேட்க, கெஞ்சப் போறதில்ல
நம்மளோடத நாமே புடிங்கிப்போம்

ஜெய் பீம்

3.

உனக்கு தெரிஞ்சதெல்லாம் அஞ்சே வார்த்தை
தலித், சாதி, மெரிட், அம்பேத்கர், இடஒதுக்கீடு.

சாதி நாட்டிலே அடிமைமுறை
நிலம், வளம், கல்வி எல்லாம்
ஆயிரம் வருசமா கொள்ளை அடிக்குற
இடஒதுக்கீட்டத்தான் குறையும் சொல்லுற.

சட்டத்தில் இருக்கும் உரிமை,
ஒடுக்கப்பட்டவர் இடத்துக்காக
கொடுத்தது எங்கள் பாபசாஹேப்
உன்னோட தானம் இல்லை
வறுமைக்கு தந்ததில்லை இது.

கல்வி, ஊடகம், அரசாங்கம், நீதி, தனியார், அரசியல், சினிமா
எங்கயும் ஒருசில சாதிக் கூட்டம் பெருகிக் கிடக்குது.
உன் சோறு எங்க விளைச்சல்
உன் நிலம் நாங்க உழுதது
உன் வீடு நாங்க கட்டினது
தொழிலாளர் நாங்கதான்
என் ரத்தம் வியர்வையில்தான்
இங்க நிக்குற நீ

என்கிட்ட மெரிட்டுன்னு சொல்லாத நீ
எதுக்கும் பயன்படாத இனம்தான் நீ

உனக்கு தெரிஞ்சதெல்லாம் அஞ்சே வார்த்தை
தலித், சாதி, மெரிட், அம்பேத்கர், இடஒதுக்கீடு.

கோட்டா என்பது தானம் இல்ல
சாதி இங்க நடைமுறை நிஜம்
உன் மெரிட்டில் தரம் எதும் இல்ல
நம் நிலைகளில் இல்லை சமம்.

புரிஞ்சுக்கோ தெளிவாக
உண்மைய உரக்க சொல்லுறேன்
தரத்த நான் உயர்த்த போகிறேன்.
இந்த பீட்டு என் காயத்துக்கு மருந்து
உடைந்த சிறகை ஒட்டி, இடைவெளிகளை நிரப்பிடுமே
நிஜமெது நாடகமெது, அறிந்திட
விழுப்புணர்வு அது இருக்குது.

புல்லுல நிறைய பச்சப் பாம்பு
கண்டதையும் கண்டு சலிச்சாச்சு.
உண்மை எங்கே?

இந்தச் சமூகம் வெறுப்பாச்சு.
என் முன்னோர் சொன்னாங்க
இதை சரிசெய்ய முடியாது
வைக்கனும் முழுக்க வெடிதான் என்று.

நாட்கணக்கு முக்கியமில்ல
சிறப்பாக வாழணுமின்னு
சொல்றாரு பாபாசாஹேப்.
பேச்சும் எழுத்தும் வாழ்க்கைக்கு ஈடாகாது
நம்பினபடி நீ நடந்தியா? இல்ல பொய்யா?
என்று காட்டும் உன்னோட வாழ்க்க
நம்பிப் பேச நமக்கு
அதுதான் நிற்கும் எதிர

உனக்கு தெரிஞ்சதெல்லாம் அஞ்சே வார்த்தை
தலித், சாதி, மெரிட், அம்பேத்கர், இடஒதுக்கீடு.

பின்னூட்டமொன்றை இடுக