– விஜேதா குமார்

ஆங்கிலத்தில்


மொழிபெயர்ப்பு

டிசம்பர் 10, 2018 அன்று டெல்லியின் விஷ்வ யுவ கேந்திரத்தின் சிறிய அரங்கமொன்றில் பாடகர் மால்திராவ் பௌத் மெதுவாக இந்து மதத்தை அக்கக்காகப் பிரிக்கிறார் (இந்துமதம் எனும் வாழ்வுமுறை/சித்திரவதை – அது இது/இது அது –  இன்னும் அதை எப்படிச் சொன்னாலும் சரி). அவர் உரக்கவும் ஆற்றலோடும் பாடிக்கொண்டிருந்தாலும், அவரது வார்த்தைகள் என் காதில் மெல்ல தெளிவாக விழுகின்றன. ஒருவேளை அவரது பாடல்களைக் கேட்டு நான் அதிர்ச்சியுற்றிருப்பதால் – ஒரு பஞ்சைப் போல, அவர் சொல்லும் ஒவ்வொரு விசயத்தையும் உறிஞ்சி வைத்துக்கொள்ள முயல்கிறேன்.

தலித் மனித உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் (NCDHR) 20ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் இருக்கிறோம். காலையிலிருந்து நிறைய நடந்துவிட்டது, விவாதங்கள், பேச்சுகள், அறிவிப்புகள். எல்லோரும் புரட்சி, அரசியல், அம்பேத்கர் பற்றியெல்லாம் பேசிவிட்டார்கள். ஆனால் அனைத்திந்திய தலித் மஹிளா அதிகார் மன்ச்சின் (AIDMAM) பொதுச் செயலாளார் ஆஷா ஷேச் சொல்லியதுபோல, மால்திராவ் பௌத்தின் குரல் அளவு ஆற்றல்மிக்க புரட்சி வேறொன்றில்லை.

Maltirao Baudh during her performance. All images courtesy of Vijeta Kumar.

மேடையில் உயர்ந்து நிற்கிறார் அவர். அவர் நகரும்போதும், ஆடும்போது, கையசைக்கும்போது, அவர் தோளில் நழுவாமல் இருக்கிறது அந்த இளஞ்சிவப்பு துப்பட்டா.  இத்தனைக்கும் அவர் அடிக்கடி நகர்கிறார், ஆடுகிறார், கையசைக்கிறார். அது வெறுமனே ஊக்குகளின் வேலை அல்ல என்றே நான் நம்ப விரும்புகிறேன். அதில் வேறேதோ இருக்கிறது.

அவருக்கு பின்னே, ஹார்மோனியம், தோலக், பாஞ்சோவுடன் மூன்று ஆண்கள் அமர்ந்திருக்கின்றனர். மால்திராவ் அடிக்கடி அவர்களைப் பார்க்கிறார் – அவர்களின் ஒவ்வொரு தாளத்துக்கும் உக்கிரமாகத் தலையாட்டுகிறார், சிலசமயம் தத்தமது கருவிகளைப் போட்டுவிட்டு தனது கொண்டாட்டத்தில் சேர்ந்துகொள்ள அவர்களை அழைக்கிறார்.

அம்பேத்கரைப் பற்றிப் பாடும்போது தன் மகனைப் புகழும் அம்மாவின் பெருமையுடனும் இன்னும் இன்னும் பற்பல அம்பேத்கர்கள் பிறக்கக் காத்திருக்கும் பக்தையின் முழுமையான ஈடுபாட்டுடனும் பாடுகிறார்.

Karshako toh apni wadi main woh honhar paida karo — aur rukh hawaaon ka badal do — woh ashar paida karo — agar jeena hai iss duniya main, arre insaan ki zindagi — toh har ek ghar main, ek ek Ambedkar ko paida karo

(காற்றின் போக்கை மாற்றும் ஒரு சத்தியத்தை இவ்வுலகுக்குக் கொண்டு வா. மனிதராய் வாழும் விருப்பம் இருப்பின், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அம்பேத்கர் தோன்றட்டும்)

அதே உலகின் வேறொரு பகுதியில் காவி அணிந்த பல ஆண்கள், மால்திராவ் பின்வரும் வரிகளைப் பாட, வாயில் நுரைதள்ள உருண்டு அழுவதை கற்பனை செய்து பார்க்கிறேன்.

Kyunki hamare bhim ne aisa samvidhan diya hain, dharti kabhi jhukti nahi asmaan ke aage aur koyi dusra rasta nahi, samshaan ke aage. Arre aakhir ram mandir ka bhi faisla court main aagaya kyunki ram ko bhi jhukna pada samvidhaan ke aage

(ஏனெனில் எங்கள் பீம் அப்படியொரு சட்டத்தைத் தந்திருக்கிறார். இங்கே மண் வானின்முன் பணியாது, இடுகாட்டைத் தாண்டி சாலைகள் இருக்காது. அட, உங்கள் ராமரே எங்கள் சட்டத்தின் முன் பணியவேண்டி இருப்பதால்தானே அயோத்திக்கான தீர்ப்பு நீதிமன்றத்தில் முடிவாகிறது.)

Bhim aise ek asra hai, zaha uzhala hi uzhala kar dala — hamein jo andhere main rakhte the, unka toh mooh kala hi kala kar dala

(பீம் எங்கும் ஒளிகொணர்ந்த ஆயுதம், முன் எம்மை இருளில் வைத்திருந்தோர் முகங்களில் கரி பூசியவர்.)

அவர் பாடுவதைக் கேட்கப் போகும்போது, அடுத்து என்ன கேட்கப் போகிறீர்கள் என சொல்லவேமுடியாது. அவர் பாடல்களில் முதல் சில வரிகள் பிரபல இந்தி சினிமா பாடல்களாக இருக்கும், பாடல்வரிகளில் மாற்றமின்றி. எனவே ‘ஹமே தோ லூட் லியா மில்கே ஹஸ்னா வாலோன் நே’ (நம்மைக் கொள்ளையடித்தனர் அழகிகள்) பாடலின் வரிகளோடு தொடங்கும்போது, அடுத்த வரிகள் ‘ஹமே தோ லூட் லியா தேக்கோ சாய் வாலே நே’ (நம்மைக் கொள்ளையடித்தான் பாரு, டீக்கடைக் காரன்) என்பதாக இருக்குமென உங்களுக்கு எப்படித் தெரியும்.

***

அவர் சாவித்திரிமாவைப் பற்றிப் பாடுகையில், அவரது வியர்வை கண்ணீராகவும், கண்ணீர் வியர்வையாகவும் ஆகிறது. என்னைச் சுற்றி ஆண்களும் பெண்களும் ஷால்களையும் ஸ்வெட்டர்களையும் கழட்டிவிட்டு கை தட்டுகின்றனர். ஏனெனில் மால்திராவ் பாடும்போது அங்கே தில்லியின் குளிருக்கு இடமில்லை.

சாவித்திரிமா தினம் காலை வேலைக்குப் போகும்போது உயர்சாதி ஆண்களும் பெண்களும் நின்றுகொண்டு மாட்டுச் சாணியை அவர் மீது வீசுவார்கள். அவர், தானும் ஜோதிபாவுமாக உயர்சாதி எதிர்ப்பையும் மிரட்டல்களையும் மீறி இளம் பெண்களுக்காக நடத்திய பள்ளியில் கற்பிக்கச் செல்வார்.

தேனைப் போல் மென்மையான, வெல்லத்தைப் போல் கடினமான குரல் ஒன்றில் மால்திராவ் சொல்கிறார் – சாவித்திரிமா அவர்கள் மேல் மாட்டுச்சாணியை திருப்பி வீச எப்போதும்  முற்பட்டதில்லை. ஓடியதுகூட இல்லை.

அபைதியாக எல்லா சாணியையும் தாங்கிக்கொண்டு நடப்பார். பையில் ஒரு மாற்றுப் புடவை வைத்திருப்பார், பள்ளிக்குப் போனதும் அதை எடுத்து கட்டிக் கொள்வார்.

பள்ளி முடிந்ததும் மறுபடி சாணிப் புடவையைக் கட்டிக்கொள்வார். தினமும் போல, அன்றும் கையில் மாட்டுச் சாணியோடு அவர்கள் காத்திருப்பார்கள் என சாவித்திரிமாவுக்குத் தெரியும். அங்கிருந்து நகரவே இல்லை என்பதுபோல, அவர்கள் வாழ்க்கைக் கடனே கையில் மாட்டுச் சாணியோடு சாவித்திரிமா பணியில் இருந்து திரும்பிவருவதற்காக காத்திருப்பதுதான் என்பதுபோல நிற்பார்கள்.

இந்தக் கதை என் உடலுக்குள் நிகழ்த்தியவற்றை விவரிக்க ஆங்கிலத்தில் வார்த்தை இல்லை. ஒரு அறையைப் போல, ஒரு குத்தைப் போல, ஒரு வலிப்பைப் போல. அது ஒரு பதில்,  வெங்காய மூட்டைபோன்ற கனமான,

மால்திராவ் என் மடியில் போட்ட, ஒரு தீர்வு. நான் அதைப் பிடித்துக்கொண்டேன். அதைப் பிடித்துக்கொண்ட நான், அதனை விடுவதாக இல்லை.

நானும், என்னைப் போன்றோரும், ஒவ்வொரு நாளும் வேலையில் பல தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவே எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம்? எங்கள் பணிகளை தற்காத்துக் கொள்வது மட்டுமே நாங்கள் செய்யும் ஒரே விஷயம் போல அடிக்கடித் தோன்றும். கல்வித்துறையில் பணியாற்றும், தலித், பகுஜன் அல்லது ஆதிவாசி ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தால், அதுமட்டுமே நீங்கள் செய்யும் காரியமாக இருக்கும். உங்கள் எழுத்துகளைத் தற்காத்துக்கொள்ள பேசுவது, வகுப்புகளுக்காக, இட ஒதுக்கீட்டுக்காக, பாடத்துக்காக, துறைக்காக, உங்களுக்காக. ஆனால் யாரிடமிருந்து? அது முக்கியமில்லை. நான் புடவை மாற்றும்வரை சற்று காத்திருங்கள்.

அமைதியாக தொடர்ந்து நடப்பதும் ஒரு மாற்றுப் புடவை வைத்துக்கொள்வதும்தான் தீர்வு என எனக்கு தோன்றியதே இல்லை. சாணியை எடுத்து திரும்ப வீசி, வேலைக்குத் தாமதமாகப் போவது தீர்வாக இருக்கவேண்டாம். தீர்வென்பது சும்மா நடந்துபோவதாகவும் இருக்கலாம். பதிலென்பது மற்றவர்களை வெறுப்பதைவிட கொஞ்சம் கூடுதலாக தன்னை நேசிப்பதாக இருக்கலாம்.

மால்திராவ் மேடையில் பாடுவதைப் பார்ப்பது ஒரு காதல் அனுபவம். ஹன்னா கேட்ஸ்பி நகைச்சுவையை கொண்டுசென்று கோபத்தை எதிர்கொள்ள வைக்கிறார் என்றால், மால்திராவ் கோபத்தை இழுத்துவந்து காதலை எதிர்கொள்ளவைக்கிறார்.

***

மறுநாள் காலை, AIDMAMஇன் தலித் பெண் செயற்பாட்டாளர்களுக்காக நான் நடத்திய எழுத்திப் பயிற்சியின்போது, மால்திராவ் பௌத், காசியாபாதின் அம்பேத்கர் காலனியில் தான் ஒரு செவிலியாக பணியாற்றுவதைச் சொல்கிறார். குறைந்தது 12 முறையாவது வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். வலதுசாரி ரவுடிகள் அவரைக் கொல்ல நான்கு முறை முயற்சித்திருக்கிறார்கள். கடைசி முறை, ஒரு புல்லட் அவர் காதை ஒட்டிச் சென்று அவர் கணவரைத் தாக்கியதில், அவர் கணவர் சில மாதங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டி வந்திருக்கிறது.

முதல் மூன்று முறை அவர் சுடப்பட்டபோது நடந்தவற்றை சொல்லும்படி அவரை நிர்ப்பந்திக்கிறோம், ஆனால் “ஒண்ணும் ஆகல” என்றே சொல்கிறார்.

முதல் இருமுறை அவர் பாடிக்கொண்டிருக்கையில் நடந்திருக்கிறது, அவரை மேடையிலிருந்து அவசர அவசரமாக இறக்கிச் சென்றிருக்கிறார்கள். மூன்றாவது முறை ரவுடிகள் அவர் வீட்டுக்கே சென்று அவர் காரிலிருந்து இறங்குவதற்காக காத்திருந்திருக்கிறார்கள். அவரைக் கொல்லும் அவசரத்தில் காரை சுடத் தொடங்கியிருக்கிறார்கள். வரலாற்றுப் பெருமைகொண்ட அந்த மாட்டுச் சாணிபோல, அவர்கள் புல்லட்டுகள் எல்லாம் அதிலேயே உயிரற்று விழுந்து தீர்ந்துவிட, மால்திராவ் பிழைத்திருக்கிறார்.

அவர் வேலையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதைப் பற்றி யாரோ கேட்க, தன்னையும் தன் மனவுறுதியையும் வெறுக்கும் காசியாபாதின் பண்டிட்ஜீக்களைப் பற்றி சொல்கிறார். அவரை வேலை செய்யவிடாமல் தடுப்பதே அவர்கள் வேலை. கடைசிமுறை அப்படி நடந்தபோது, ஒரு பண்டிட்ஜீயை ரோட்டில் துரத்திச் சென்று காலரைப் பிடித்து அறைந்திருக்கிறார்.

“பளார் பளார்னு வைச்சேன்” என அந்த சம்பவத்தின் படங்களை ஃபோனில் காட்டுகிறார். நாங்களெல்லாம் கைத்தட்டி, பயங்கரமாக சத்தமெழுப்பினோம்.

***

“உங்களுக்கு பயமா இருக்கலையா?”

“என்ன பயம்? செத்தா, நான் மேடையிலதான் சாவேன் – பாடிகிட்டே.”

அவர் பாடுவதைக் கேட்கவரும் சாதி இந்துப் பார்வையாளர்களின் எதிர்வினையை அறிந்துகொள்ள எனக்கு ஆர்வம். முகத்தைச் சுழித்து, சொங்கிப் போகும் ஆட்கள், தங்களுக்கு விவரம் தெரியும் என நினைத்துக்கொள்பவர்கள், தாக்குவதற்கு சாணியையும் துப்பாக்கியையும் பயன்படுத்தாதவர்கள்.

“மனசுல மூலையில ஒரு சந்தேகம், அவங்களுக்கு நம்மப் பாத்து ரொம்ப பயம்னு.”

அப்போது நாம் என்ன செய்வது? அவர்களை எப்படிக் கையாள்வது?

“அட, நம்ம வார்த்தைகளால அவங்களக் கொல்ல வேண்டியதுதான்.”

பற்பல பதில்கள்.

ராஹுல் பாஸ்வானின் இந்த இந்தி மொழிபெயர்ப்பும் பல இடங்களில் உதவியாக இருந்தது.

Advertisements

One thought on “செத்தால் மேடையில் சாவேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s