பேசும் மொழிபெயர்ப்பாளர்கள்

நன்றி: அகழ்

மொழிபெயர்ப்பு என்ற சொல்லை நாம் இரு வடிவங்களில் பயன்படுத்துகிறோம். மொழிபெயர்க்கப்பட்ட பிரதியைக் குறிக்கவும், மொழிபெயர்ப்பு எனும் செயல்பாட்டைக் குறிக்கவும். மொழிபெயர்ப்பு என்பது ஒரு செயல்பாடென்றால், மொழிபெயர்க்கப்பட்ட பிரதியில் அது என்னவாக மிஞ்சியிருக்கிறது என்பதை யோசிப்பது ஒருவகையில் மயிர்பிளக்கும் பயனில்லா விவாதமாகத் தோன்றலாம், ஆனால் நாம் எப்படி மொழிபெயர்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள இது பயன்படும்.

ஒரு கவிதை மொழிபெயர்க்கப்பட அது தன்னகத்தே மொழிபெயர்ப்புச் சாத்தியங்களைக் கொண்டிருக்க வேண்டுமா? ஒரு மொழிபெயர்ப்பாளர் கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களை இன்னொரு மொழியில் திருப்பச் சொல்வதன் மூலம், சொல்லப்படாத ஒன்றை மீட்டுருவாக்கம் செய்கிறாள் அல்லது செய்துவிட்டதாக நம்புகிறாள். மொழிபெயர்ப்பைப் படிக்கும் வாசகி மூலத்தைப் படிக்கப் போவதில்லை என்பது ஒரு பொது அனுமானம். தன்னிடம் இருக்கும் கவிதையுடன் மட்டுமே வாசகிக்கு தொடர்பு. எப்படி மூலத்துக்கு மொழிபெயர்ப்பால் எந்த பாதிப்பும் இல்லையோ, அதேபோல் இந்த மொழிபெயர்ப்புச் செயல்பாட்டுக்குப் பிறகு மொழிபெயர்க்கப்பட்ட பிரதிக்கும் மூலத்தால் எந்த பாதிப்பும் இல்லைதானே?

நாம் எதனை மொழிபெயர்க்கிறோம்? நிச்சயம் சொற்களை அல்ல. சொற்கள் மட்டும் எதையும் உருவாக்குவதில்லை. அர்த்தத்தை என்றால், ஒரு பிரதிக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோமா? மொழிபெயர்ப்ப்பு இரு மொழிகளுக்குள் இருக்கும் தொடர்பை காட்டுவது என்கிறார் வால்டர் பெஞ்சமின். எல்லா மொழிகளுக்கும் இடையே பொதுவானதொரு அமைப்பு மனித மூளைக்கூறின் பகுதியாக அமைந்திருக்கிறதா? அதனால்தான் மொழி செயல்படுகிறதா? 

மொழி அல்லாது மொழிபெயர்ப்பில் பங்காற்றும் முக்கியமான ஒன்று மொழிபெயர்ப்பாளர் என்ற தனிநபர். ஒவ்வொரு தனிநபரைப் போல மொழிபெயர்ப்பாளரும் பல முன்முடிவுகள், அரசியல் கருத்துகள், வாழ்க்கை அனுபவங்கள் இவற்றின் கலவையாகவே இருக்கிறாள். அப்படி ஒருத்தி ஏன் மொழிபெயர்க்க வேண்டும்? ஏ. கே. ராமானுஜன் பொறாமையைக் கை காட்டுகிறார். பொறாமை, ஒரு நல்ல தூண்டுதல். அன்பு அல்லது காதல் மற்றுமொரு தூண்டுதல். பிரபலமான ஒன்றும் கூட. ஒரு பிரதியை மொழிபெயர்ப்பாளரை விட மிக நெருக்கமாக வா(நே)சிக்கக்கூடிய ஒரு வாசகர் இல்லை. ஒருவகையில் அதுவும் மற்றவர்களின் பொறாமையைத் தூண்டும் செயல்பாடு. இவையன்றி மூன்றாவதொரு தூண்டுதல் விளையாட்டு. எழுத்தில் விதிகள் இல்லை, அல்லது நீங்களே வகுத்துக் கொள்பவை தாண்டி வேறு விதிகள் இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பு அப்படியல்ல. அதற்கு மொழிபெயர்ப்பின் விதிகள் இருக்கின்றன. இரு மொழிகள், இரு கலாச்சாரங்களின் எல்லைகள், விதிகள். மொழிபெயர்க்கப்படும் பிரதியின் விதிகள். அது இவை எல்லாவற்றோடும் ஆடும் ஒரு விளையாட்டு. மிகவும் சுவாரஸ்யமான மகிழ்ச்சியான வேடிக்கையான விளையாட்டு. உண்மையில் இந்த விளையாட்டே பொறாமை, காதல் போன்றவற்றை விட மிக அடிப்படையான மானுட உணர்வாக இருக்கலாம். அதுவே பல சமயங்களில் மொழிபெயர்ப்புக்கு மீண்டும் இழுத்து வருகிறது.

எல்லா மொழிபெயர்ப்பாளர்களுக்கும் பொதுவான அம்சம், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் யோசிப்பதன் மனப் பிளவுகள். ஏகேஆர் தனது டைரியில் 1982இல் எழுதிய குறிப்பில் எழுதுவதைப் பற்றி இப்படிக் குறித்திருக்கிறார்.

மூன்று மொழிகளை பயன்படுத்துவதும் ஒத்துப்போகச் செய்வதுமே என் முழுநேர வேலை; ஆங்கிலத்தில் எழுது-கொஞ்சம் கன்னடத்திலும்; கன்னடம், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்; என் ஆங்கிலமும் தமிழும் கன்னடமும் ஒன்றிலிருந்து ஒன்று அடைபட்டுவிடாதபடி எழுது. இருந்தாலும் எழுதும் மொழி தேர்வல்ல. நீண்ட, சிக்கலான, தனிப்பட்ட, பல வகையான வரலாறுகள் நம் மொழியைத் தேர்வுசெய்கின்றன; மொழி நம்மை தேர்வு செய்வதாகவும் தோன்றுகிறது. ஒரு கவிதை உருவில்லாமல் வந்து ‘உனக்கு மூன்று மொழி தெரியும், என்னை எதில் எழுதுவாய்?’ என்று கேட்பதில்லை. கனவில் தோன்றும் கிராமத்துக் கடவுளைப் போல, முழு ஆடையணிந்து, உன் – அவள் தாய்மொழியில் அலறியபடி தோன்றுகிறது, அல்லது அவளுக்கு உயிரளித்த மொழியில். பின் அவளை சமாதானப்படுத்தி, கெஞ்சி, காத்திருந்து, கஷ்டப்பட்டு வேலை செய்து, ஓரிரு ஆடுகளை பலியிட்டு, அவளை இருக்கச் செய்யவேண்டும். உனக்கு மட்டுமின்றி, ஊரில் உள்ள பிறருக்கும் இருக்கச் செய்யவேண்டும்.”

ஏ.கே.ராமானுஜன்

எழுதுபவருக்கு தெய்வம் கனவில் சன்னதமாகிறதென்றால், மொழிபெயர்ப்பாளர் எழுந்துள்ள தெய்வத்தை வேறு ஊரில் கொண்டுவந்து இருத்தவேண்டும். புதிய பூசைகளை, ஏற்கனவே இருக்கும் பூசைகளை இதற்குப் பயன்படுத்தவேண்டும். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் அவர் கொண்டு வந்த தெய்வத்தை இழந்து புதிய தெய்வத்தையே உருவாக்குகிறார். இந்த செய்கையை எப்படிப் புரிந்துகொள்வது?

அதற்கு மொழிபெயர்ப்பாளரின் குரலைக் கேட்கவேண்டும். பெருமாள் முருகனின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான ஜனனி கண்ணன் இப்படிச் சொல்கிறார். “மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளரின் கருத்தை முன்வைக்காமல் ஆசிரியரின் கருத்தை நிலைநிறுத்துவது முக்கியமாக இருக்கவேண்டும்.” தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி ஒரு பேட்டியில் இப்படிச் சொல்கிறார். “மூல ஆசிரியருக்கு மொழிபெயர்ப்பாளர் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட வேண்டும். அவரது தொனி, மொழி, நடை என்று எல்லாவற்றையும் அப்படியே கொண்டுவர வேண்டும்.” மேலும் “மொழிபெயர்ப்பு என்பது ஓர் இணையான படைப்பாக்கம். வாசகரைப் படைப்பாளியிடம் மொழிபெயர்ப்பாளர் கொண்டுசேர்க்க வேண்டும். படைப்பாளியை வாசகரிடம் கொண்டுவருதல் இலக்கிய மொழிபெயர்ப்பாகாது” என்கிறார்.

இருவர் சொல்வதிலும் ஆசிரியரின் குரலும் தொனியுமே முன்னிலை வகிக்கின்றன. மொழிபெயர்ப்பின் அடிப்படை அதுதான் என்றாலும், குறிப்பிட்ட மொழிபெயர்ப்பாளரின் பங்கு படைப்பூக்கமிக்கது. ஒரு மொழிபெயர்ப்பாளரின் குரல்(கள்), தொனி(கள்) வழியாகவே நாம் படைப்பை வாசிக்கிறோம். அவை அந்தப் படைப்பை எப்படி உருமாற்றுகின்றன என்பதை நாம் யோசிக்கிறோமா?

இன்னொரு தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பாளர், சில கதாபாத்திரங்களின் தமிழுக்கு இணையான ஆங்கிலத்தை எழுத முயன்றதாக சொல்லியதையும் நேரில் கேட்டிருக்கிறேன். இப்படி ஒரு ‘இணை மொழி’யை தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, உருவாக்கவே படுகிறது. அது கவித்துவ நடையாக இருக்கலாம், பேச்சு வழக்காக இருக்கலாம். எந்த ஒரு எழுத்தாளரின் ‘வட்டார வழக்கும்’ அந்த வட்டார வழக்கை அவர் எவ்வாறு புனைவில் மீட்டுருவாக்குகிறார் என்பதைப் பொறுத்து மாறுவதைப் போல. எனவே அந்த இணை மொழி, ஒரு இணை மொழியாக எப்படி வேலை செய்கிறது? இவையே இந்த மொழிபெயர்ப்பாளர்களின் முழுமையான கருத்து என்று சொல்லிவிட முடியாது. ஆனால், எழுத்தாளர்களின் குரலைப் பிரதிபலிக்க முயலும் இந்த மொழிபெயர்ப்பாளர்களின் கருத்தில் மொழிபெயர்ப்பாளரின் குரல் கேட்கிறதா என்றால் ஏதோ குறைவதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதனை முழுமையாக புரிந்துகொள்ளாதவரை நாம் மொழிபெயர்ப்பு என்னும் செயல்பாட்டை முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. தனித்துவமான நடையும் மொழியும் கொண்ட உலக இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் நாம் மொழிபெயர்ப்பாளரிடம் என்ன எதிர்பார்க்கிறோம், ஒரு மொழிபெயர்ப்பாளரின் சுதந்திரங்களும் கட்டுப்பாடுகளும் என்ன என்பதை நாம் இன்னும் செறிவாக அணுகமுடியும்.

ஷோகன் (Shōgun) அமெரிக்கர்களால் தயாரிக்கப்படும், நிறைய ஜப்பானியர்கள் நடிக்கும் பங்கேற்கும் ஒரு தொலைக்காட்சித் தொடர். இதே தலைப்பிலான ஜேம்ஸ் க்ளேவலின் ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டது. குழப்பமான அரசியல் சூழலும், போர்ச்சுகீசியர்களும் நிறைந்த 1600களின் ஜப்பானுக்கு வரும் ஒரு ப்ரொட்டெஸ்டண்ட் ஆங்கிலேய கப்பலோட்டி, ஜப்பான் அரசியலின் ஒரு முக்கியமான நபரான டொரனாகாவுடன் அணுக்கமாவதே கதை. கதைப்படி ஜப்பானில் இருக்கும் போர்ச்சுகீசியர்களும், அவர்களுடன் பழகிய அங்கிருக்கும் கிறுஸ்துவர்களும் போர்ச்சுகீஸ் மொழியே அறிந்திருக்கிறார்கள். அவர்களுடன் கப்பலோட்டி போர்ச்சுகீஸில் பேசுகிறான். தொலைக்காட்சியில் அது நமக்கு ஆங்கிலமாகவே கேட்கிறது.  இரண்டு நிலையிலாக மொழிபெயர்ப்பு நடக்கிறது. கதைக்குள்ளேயேயும் வெளியேயுமாக.

மாரிகோ எனும் ஒரு முக்கிய கதாபாத்திரமும், அவ்வப்போது வரும் ட்ஸூஜி(மொழிபெயர்ப்பாளன்) எனும் கத்தோலிக்க பாதிரியும் மொழிபெயர்ப்பாளர்களாக இருக்கிறார்கள். இந்த மொழிபெயர்ப்பாளர்கள் இருவருக்குமே தங்களுக்கென நோக்கங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையில் மொழிபெயர்க்கிறோம் என்ற போதம் இருக்கிறது. அதை விட்டுத்தருவது அவர்களுக்கோ, அவர்கள் மொழிபெயர்ப்பவர்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய சூழலிலும் அவர்கள் செயல்படுகிறார்கள். ஷோகன் தொடரில் மொழிபெயர்ப்பாளர்கள் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப சமயங்களில் மொழிபெயர்க்கிறார்கள். கலாச்சார வித்தியாசங்களுக்கு ஏற்ப விவரணைகளைக் கூட்டுகிறார்கள், சில விசயங்களை சொல்லாமல் தவிர்க்கிறார்கள், மாற்றிச் சொல்கிறார்கள். மொழிபெயர்ப்பு என்பது வரலாற்றில் அப்படியாக ஒரு அரசியல் கருவியாகவும் இருக்கிறது. 

நவீன இலக்கிய மொழிபெயர்ப்பு என்பது நிச்சயம் இதிலிருந்து மாறுபட்டதே. நாம் இங்கே வேறு சில விதிகளின் கீழே செயல்படுகிறோம். இந்த வெளியில் நாம் மொழிபெயர்ப்பாளர்களது அரசியல் அவர்களது தேர்வுகளுடனே நின்றுவிடுவதாக அடிக்கடி நம்புகிறோம், அல்லது விரும்புகிறோம். ஆனால் பொதுவான / சீர்படுத்தப்பட்ட (standardized) மொழி  இருப்பதாக எண்ணுவது போலஇதுவுமொரு கற்பனையே. கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான சுகுமாரன் சொன்னதுபோல ‘மொழிபெயர்ப்பு ஒரு நன்றி வேண்டாத செயல்’ என்றாலும், இது ஒருவகை பொறுப்புத் துறப்பு என்றும் சொல்லலாமா? ஒரு எழுத்தாளரை இலக்கணம் வழுவாமல் எழுதவேண்டுமென நாம் நிர்பந்திக்க மாட்டோம் என்கையில், மொழிபெயர்ப்பாளரை நிர்பந்திக்க முடியுமா? அல்லது எது மொழிபெயர்ப்பாளரின் இலக்கணம்? இங்கு ஒரு மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளரை விட ஒரு நடிகருக்கு நெருக்கமாக இருக்கிறாரோ என்று தோன்றலாம். எழுத்தாளரை விட பல விதமான கதாபாத்திரங்களுக்கு உயிரளிக்கிறாரா என்பதை யோசிக்கலாம். ஆனால் நடிகரோ, எழுத்தாளரோ, மொழிபெயர்ப்பாளரோ கதாபாத்திரங்களுக்கு தங்களுடைய சாரத்திலிருந்தே உயிரூட்டுகிறார்கள். அந்த சாரம் குறித்தே நாம் பேசுகிறோம்.

பல இடங்களில் நான் ஏ.கே.ராமானுஜத்தை நினைத்துக் கொள்கிறேன். மொழிபெயர்ப்பாளர்கள் இரு கலாச்சாரங்களுக்கு இடையில் பணியாற்றுகிறார்கள் என்பதன் முழுமையான பிரதிபலிப்பு ஏ.கே.ஆர்தான். ஒப்பீட்டுக்கு இந்தியாவில் தனது தாய்மொழி பேசும் பிராந்தியத்தில் வசித்தபடி, அதிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் ஒருவர்,  கலாச்சார வித்தியாசங்களுக்கு இடையே மொழிபெயர்க்கிறார் என்றாலும் அது மிகக்குறைந்த இடைவெளி. ஆங்கிலம் பேசும் இந்தியர்களுக்கும், ஆங்கிலம் பேசாதோர்க்கும் உள்ளது போன்ற இடைவெளி என்று சொல்லலாம். அதன் கலாச்சார இடைவெளி வர்க்கங்களுக்கு இடையிலான வித்தியாசம் மட்டுமே. ஏ.கே.ஆர் காலங்கள், கலாச்சாரங்கள், கண்டங்களுக்கு இடையில் மொழிபெயர்த்தார். இதை அவர் முழுக்கவும் அறிந்திருந்தார்.

இன்னொரு பக்கம் ஏ.கே.ஆர் ஒரு முழுமையான கவிஞர். அவரது கவிதைக் குரல் தனக்கென முழு வடிவம் கொண்டது. ஏ.கே.ஆர் அதன்மேல் நின்றே மொழிபெயர்க்கிறார். அந்த குரல் வழியாகவே தான் மொழிபெயர்ப்பவற்றை எழுதுகிறார். இவற்றை மிகத் தெளிவாக அணுக உதவிய ஒரு தமிழ் மொழிபெயர்ப்புக் குரல், அக்கமகாதேவியின் வசனங்களை மொழிபெயர்த்த பெருந்தேவியின் முன்னுரை. அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“ஏ.கே. ராமானுஜனின் வசன மொழியாக்கத்துக்கு அதற்கேயான சிறப்பம்சங்கள் இருப்பதை மறுக்க முடியாது. நவீன ஆங்கிலக் கவிதைப் பாணியின் எளிமையும், வார்த்தைத் தேர்வில் உலகார்ந்த தன்மையும் கொண்டிருப்பது அவருடைய மொழியாக்கம் என்றாலும், சென்னமல்லிகார்ச்சுனன் என்ற பெயரை அவர் மொழிபெயர்த்த விதம் எனக்கு உவக்கவில்லை. ராமானுஜனின் “ஓ மல்லிகையைப் போன்ற வெண்மையான கடவுளே” (O Lord, white as jasmine) என்பதற்கும் சைதன்யாவின் “சென்னமல்லிகார்ச்சுனனே, மென்-மல்லிகையே” (Channamallikaarjuna, jasmine-tender) என்ற அழைப்புக்கும்தான் எத்தனை தொலைவு!”

எனக்குத் தனிப்பட்ட முறையில் ராமானுஜத்தின் அக்கமகாதேவியும் மனதுக்கு நெருக்கமே. பனிவிழும் வனங்களின் தனிமை போல் பிரம்மாண்டமான கடவுள் அவளுடையது. அதற்கு வெண்மை பொருத்தமான சொல்லே. ஒரு மொழிபெயர்ப்பாளர் குறிப்பிட்ட ‘வாசகர்களுக்காக’ மொழிபெயர்க்கிறார் என்பதை விட, இலக்கிய பிரதியை மொழிபெயர்ப்பாளர் தனது குரலில் மீட்டுருவாக்குகிறார் என்பதே இங்கு உணரவேண்டியது.

அதே முன்னுரையில் பெருந்தேவி “கவிதையின் மீளுருவாக்கத்தில் கவிதை தங்கவேண்டும்” என்பதைக் குறிப்பிடுகிறார். “இத்தொகுப்பை அக்கமகாதேவியின் வசனங்களுக்கான என் பொருள்கோடலாகவும் வாசிக்கலாம்” என்றும் சொல்கிறார். இவை மிக முக்கியமானவை. கலைநுட்பத்தில் மொழிபெயர்ப்பு குறைந்ததல்ல என்பதை நாம் ஒப்புக்கொண்டாலும், அதை அடுத்து மொழிபெயர்ப்பாளரின் தனித்தன்மை/குரல் மொழிபெயர்ப்பில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் விரிவாகப் பேசியறிவது நம்மை இன்னும் முன்னகர்த்திச் செல்லும்.

பின்னூட்டமொன்றை இடுக