நீலகேசி – சிவசங்கர் எஸ்.ஜே

நன்றி: அகழ்

சமீபத்தில் ஒரு கான்வாசில் வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தபோது, சில அடுக்குகள் பச்சையும் பொன்னும் மாற்றி மாற்றி தீட்டினேன். எதேச்சையாக அதில் பட்டின் சாயல் வந்துவிட்டது. உடனே ஏதோ ஒரு மாயாஜாலத்தை உருவாக்கிய உணர்வெழுந்தது. அதை தொட்டுப் பார்க்கத் தோன்றியது. சில நாட்கள்  கழித்து சுப்திகா எம்மின் “அலைகளால்” என்ற புகைப்படக் கண்காட்சியில் பார்த்த மஞ்சள் பொன்னிற புடவையொன்றின் படம் அதே உணர்வை ஏற்படுத்தியது. நீலகேசியை சிவசங்கர் எஸ்.ஜே. பட்டு நீலத்தின் விவரணையோடு தொடங்குகிறார்.

பொன் நீலத்திலிருந்து ‘எனிக்கொரு சரித்ரம் இல்லடா பொன்னுமோனே’ என்ற குரலுடைய கனவாக நீலகேசி தொடங்குகிறது. கொடைவிழா சம்பவங்கள் ஒரு ஆய்வாளனின் ஆவணப்படுத்தலாகவும், அந்த ஆவணப்படுத்தலே கதையாகவும் தொடர்ந்து விரிகிறது. ஒரு சிறுமழையாக, முதல் கனவிற்கு சில பதில்களை சொல்லும் உரையோடு முடிகிறது. சாதிக் கொலையொன்றில் பல கதைவடிவங்களை பதிவுசெய்யும் நீலகேசி, சிவசங்கர் தன் பின்னுரையில் சொல்வது போல சாதிக்கான நிவாரணமான இணக்கத்தை முன்வைக்கிறது. 

எனக்கு இச்சமயத்தில் நீலகேசியில் பட்டு நீலமே மிக அணுக்கமாகப் படுகிறது. சமீபமாக உண்மையை எழுதுதல் என்ற கருத்தாக்கம் குறித்து நிறையவே யோசிக்கத் தோன்றியிருக்கிறது. நேரடியாக உலகை நம் பார்வையிலிருந்து, நம் பார்வையின் எல்லா கோளாறுகளுடனும், அப்பட்டமாக சித்தரிப்பதில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஆனால் அந்தக் கவர்ச்சி சீக்கிரமே மங்கிவிடுகிறது. நாம் உலகை பல பார்வைகளில் இருந்தே பார்க்கிறோம். காதல் நமக்கு இன்னொரு ஜோடிக் கண்களை வழங்குவதாலேயே அற்புதம் நிறைந்ததாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சியின் முன் இந்த ஒற்றைப்படை உண்மை அவ்வளவு மின்னுவதில்லை.

நீலகேசியில் இந்த அற்புதமே நிகழ்ந்திருக்கிறது. நமது பார்வையின்  எல்லைகளுக்கு மேல் ஒரு நிகழ்வைக் காண  முடிகிற அற்புதம். பல கதைகளால் நெய்யப்பட்ட, பட்டு நீலத்தின் ஒளி. அறிதல் என சொல்லப்படும் அனுபவம் எந்த ஒரு அளவிலும் நமக்கு வாய்க்கும்போது நிகழும் மகிழ்ச்சி அதுவே. நீலகேசியின் இறுதிப் பகுதியை வாசிக்கும்போது சில எதிர்கருத்துகள், கேள்விகள் மனதில் தோன்றியபடி இருந்தாலும், அதில் தொனிக்கும் அறிதலின் அல்லது இணக்கத்தின் மகிழ்ச்சி மனம் நிறையச் செய்வது.

சமகாலம்-வரலாறு-நினைவு இவற்றை ஒன்றின் வழி இன்னொன்றைப் பார்த்தறியும் ஒரு கதவாக நீலகேசி இருக்கிறது. ஆய்வுப் புனைவென அமைந்திருக்கிற இதில் கதைகள் மெய்யாகவும், கதை சொல்கிற கேட்கிற நிகழ்வுகள் கதையாகவும் அமைந்திருப்பதால், நம்மில் உருவாகும் உணர்வுகளும் மெய்-புனைவு என்ற இரு நிலைகளை தொடர்ந்து யோசிக்கச் செய்கின்றன. இது வழியாக நாம், நமது, பிறர் என இயல்பாகப் புழங்கும் விசயங்களை யோசிக்க இட்டுச் செல்கிறது.

நீலகேசியின் வடிவத்தை, ஓவியர் செசான் செயிண்ட் விக்டோர் மலையை வரைந்த ஓவியங்களோடு ஒப்பிடலாம். நமக்கும் ஓவியத்துக்கும், நமக்கும் வண்ணங்களுக்கும், நம் உணர்வுகள் வழி நாம் அறிவதற்கும் – அவற்றைக் காட்சிப்படுத்துவதற்குமான உறவை சில வகைகளில் மீள் வரையறை செய்தவர் என்று செசானை சொல்லலாம். செசான் அந்த மலைகளின் உண்மையை வரைய முயன்றார் என்று யோசித்தால், அது அவற்றை அப்படியே புகைப்படம் போல பிரதியெடுப்பதாக இருக்கவில்லை. நாம் காணும்-அறியும் விசயங்களை பல வழிகளில் காட்சிப் படுத்தலாம் – நேரடியாக; அதைச் சுற்றி இருப்பவற்றைப் பேசுவதன் வழியாக; அதை நாம் அறிந்த வடிவங்களிலும் தர்க்கங்களிலும் பொருத்தி விவரிப்பது வழியாக. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் இடையில் உண்மையை விவரிப்பதற்கான ஏக்கம் நமக்குள் நிறைந்திருக்கிறது. அது நாம் மட்டுமே அறிந்த உண்மையாகவோ நம்மால் அறியவே முடியாத உண்மையாகவோ இருக்கலாம்.

செசான் கிட்டத்தட்ட இருபதாண்டுகள் காலத்தில் இதையே முயற்சித்தார். ஒளியைத் தீட்டுவதன் வழி, தூரிகையை முடிந்தவரை லேசாகப் பயன்படுத்துவதன் வழி, செசான் மீண்டும் மீண்டும் மவுண்ட் செயிண்ட் விக்டோரில் எதை வரைய முயன்றார்? அதை வெறும் உண்மை என்று சொல்லிவிட முடியுமா? மலையை மலை பற்றிய நம் அறிதலுக்கு வெளியே எப்படி பார்ப்பது? பாறையை வெறும் பாறையாக – சிசிஃபஸோ அல்லது சார்த்தரின் இருத்தலியல்வாதமோ இல்லாமல்- எப்படி பார்ப்பது? அடையாளமில்லாத இடத்தில் ஒவ்வொன்றையும் எப்படி சந்திப்பது?

அடையாளம் என்ற வார்த்தை தனிப்பட்ட, சமூக எனும் இரு நிலைகளிலும் கனத்த அர்த்தங்கள் கொண்டதாய் மாறியிருக்கிறது. உண்மை, அடையாளம் போன்றவை தொடர்புடையவை என நாம் கண்டறிந்திருக்கிறோம். நீலகேசியின் ஆய்வு இதைக் குறித்த செறிவான பார்வையை வழங்குகிறது.கதைசொல்லியை ஆய்வாளனாக, கதாபாத்திரமாக, அமைதியாக கதை சேகரிப்பவனாக பல பார்வைகளில் அறியத் தருவதன் வழியாக சிவசங்கர் நமக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குகிறார். அறிதல் தரும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும் ஒன்றாக அந்த அனுபவம் இருக்கிறது.

நீலகேசி – நீலம் வெளியீடு

பின்னூட்டமொன்றை இடுக