ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது – சிறுகுறிப்பு

எல்லாவற்றுக்கும் விடையறிவது
உன்னை எந்த விதத்தில்
ஆற்றுப்படுத்தப் போகிறது?
உன் இரவுகளுக்கென நிலா வளர்க்கும்
பிரத்யேகமான இரு கண்களை
தேடிக் கண்டடை.
எல்லாவற்றுக்கும் பதில்
நீ புரிகிற காதலில் இருக்கிறது.

தமிழினி இதழில் இக்கவிதையை வாசித்ததுதான் பொன்முகலி கவிதைகளுடனான எனது முதல் அறிமுகம். காதலின் மீதான ஒப்பற்ற நம்பிக்கையையும், எல்லாவற்றின் மீதான அலுப்பையும் ஒருசேர வெளிப்படுத்திய அக்கவிக்குரலின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. உடன் அவரது தாழம்பூ கவிதைத் தொகுதியை வாங்கி வாசிக்க முயன்றபோது ஏமாற்றமே ஏற்பட்டது. அத்தொகுதியை முழுமையாக என்னால் வாசிக்க இயலவில்லை. பல்வேறு வெற்றுக் குறிப்புகளுக்கிடையே கவிதையைத் தேடிக் கண்டுபிடிக்கும் மனநிலை எனக்கின்னும் வாய்க்கவில்லை. எனவே அதைக் கைவிட்டேன். பின் புத்தகக் கண்காட்சியில் ‘ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுக்கும் திரும்புகின்றபோது’ தொகுப்பை எதேச்சையாக கண்டெடுக்கும்போதுதான் பொன்முகலியை முதன்முதலில் வாசித்த அக்கணத்தின் உணர்வுகளை மீட்டெடுத்துக் கொண்டேன்.

பொன்முகலியின் கவிக்குரல் மீது எனக்கொரு ஆழமான நம்பிக்கையின்மை இருக்கிறது. அவை வெளிப்படுத்தும் எதையும் நான் நேரடியாக நம்பிவிடுவதில்லை. நிறைய ஏமாற்றும் ஒரு நண்பரைப் போல. அதே நேரம் நட்பைக் கைவிடும் அளவு மோசமில்லை. எனவே அவரின் கவிதைகளில் போலித்தனமில்லாத ஒரு மானுடத்தைக் கண்டுகொள்கிறேன், ஆனால் நேரடியாக அல்ல. தியாகிப் பட்டத்துக்காய் ஆற்றில் குதிக்கும் ஒரு நபரைப் போல, உறவுகளை இருபுறமும் கூருள்ள கத்தியாகவே அணுகும் நபரைப் போல, தனது புலம்பல்கள் மீது மாத்திரமே அதீத அக்கறைகொண்ட நபரைப் போல, எப்போதும் குருதி சிந்தத் தயாராக இருக்கும் காதலரைப் போல மிகுந்த கவனத்துடனே நான் அவரின் ஒவ்வொரு கவிதையையும் அணுகுகிறேன்.

இதனை எழுதத் தொடங்கி நீண்ட நாட்களாக முடிக்காமலேயே விட்டுவிட்டேன். இவ்வாறு கவிதையை அணுகுவது சற்றே அலுப்பூட்டக்கூடியது. நான் சுகுமாரனைப் போல, ஸ்ரீவள்ளியைப் போல என்னை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருக்கும் கவிஞர்களிடமே இக்காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் சென்றேன். நம்மை வேண்டுமென்றே ஏமாற்றும் ஒருவருக்கும், நம்மையும் தன்னையும் ஒருசேர ஏமாற்றும் ஒருவருக்கும் இருக்கும் வித்தியாசம் சற்றே பெரியதென்று சொல்லிக்கொண்டே மீண்டும் இக்கவிதைத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கினேன். இதில் இரண்டாம் பாணியாக ஒரு கவிஞர் இருப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை.

இதனை மீண்டும் வாசிக்கும்போது நான் இக்கவிதைகளை மிக மோசமாக மதிப்பிடுவதாகத் தோன்றுகிறது. ஆனாலும் இக்கவிதைகள் மீது எனக்கொரு ப்ரியம் இருப்பதாகவும் படுகிறது. இந்த முரணையே நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். ஒருவேளை பொன்முகலியின் குரலில் என்னை, நான் நேசிக்கும் சிலரைக் கண்டுகொள்கிறேனா என்பதை யோசிக்கிறேன். தான் மிகமிகச் சரியென கவி சொல்லும்போதே, அவர் சரியல்ல என்பது நமக்குத் தோன்றிவிடுகிறது. அது நாம் சரியல்ல என்ற அறிதலிலிருந்து வருமென்றால் பிரச்சினையில்லை. கேள்வி, அவ்வறிதலைக் கவிஞரும் பகிர்ந்துகொள்கிறாரா என்பதே! முடிவில், இல்லையென்றே எனக்குத் தோன்றியது.

பொன்முகலியின் கவிதையிலிருந்து என்னை விலகச் செய்யும் பிரச்சினையென்பது அவற்றின் தன்முனைப்பு. என் வீட்டருகே உள்ள மரத்திற்கு வருகைதரும் ஒரே இனத்தைச் சேர்ந்த இரு பறவைகளை அடையாளம் காண்பதென்பது என்னை மகிழச் செய்யும், ஆனால் பொன்முகலியை அது முக்கியத்துவம் இல்லாதவராக உணரச் செய்கிறது. உலகிலுள்ள எல்லாமே அவரது முக்கியத்துவத்தை அச்சுறுத்துபவையாகவே இருக்கின்றன. ஒரு கவி தன்னிலையை எழுதும்போது, அது வெறும் கவியின் தன்னிலையாக, நமக்கு வேற்றுமையாகவே தோன்றுமென்றால், அந்த வேற்றுமையின் பால் நேசம் உருவாகவில்லை என்றால் அங்கு கவிதை தொழிற்படவில்லை என்றே பொருள்.

உலகம் பொன்முகலியைச் சுற்றிச் சுழல்கிறது. நம்முடையதைப் போன்ற ஒரு உலகையே அவரும் எழுதுகிறார், ஆனால் அது அவருடையது. அந்தத் தன்முனைப்பிலிருந்தே அவர் கவிதையை உருவாக்கி நம்மோடு உரையாடுகிறார். அல்லது அவர் பேசுகிறார், நாம் கேட்கிறோம். இவையே அவரது கவிதைகளை வெறும் புலம்பல்களாகச் சுருக்கிவிடுகின்றன. பல சமூக ஊடகங்களில் தன்முனைப்பன்றி வேறேதுமில்லா இன்ஃப்ளூயன்சர்களை விட, ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் தகன்றுகொண்டிருக்கும் அக்கவுண்ட்டுகளை விட ஒரு கவிஞருக்கு இன்னும் சொல்ல ஏதேனும் இருக்கவேண்டும், அது இன்னும் பொன்முகலியின் கவிதைகளில் முழுமையாக நிகழவில்லை. ஆனாலும் நான் முதல்வாசிப்பின், முதற்பார்வையின் ப்ரியம் தருகின்ற நம்பிக்கையின் மீது இன்னமும் சற்று நம்பிக்கையோடே இருக்கிறேன்.

journey into the mind of – a painting by – Prabhakar Barwe

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s