சில்க் ரூட்

மலையாளம் படிக்கப் பழக வேண்டுமென்பது இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நினைத்துக்கொண்ட கோல்களில் ஒன்று. ஆனால், தினசரி வாழ்வில் புழக்கத்தில் இல்லாத ஒரு மொழியைப் பழகுவதென்பது அவ்வளவு எளிதல்ல. மலையாளத்துக்கும் தமிழுக்குமான உறவும், வாங்கி வைத்திருக்கும் அகராதிகளும் சற்றே நம்பிக்கை அளித்தன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன் இதே முயற்சியில் எழுத்துகள் வாசிக்கப் பழகத் தொடங்கியதும் ஒரு உருப்படாத தைரியத்தில் இலக்கின்றி குமாரன் ஆசானின் லீலா நெடுங்கவிதையை வாசிக்க முயன்று தோற்றேன். இம்முறை முயற்சியைத் தொடங்க உந்தியது அலீனாவின் இந்த நேர்காணல். பல வகைகளின் மனதுக்கு நெருக்கமானதாகத் தோன்றியதால் அலீனாவின் சில்க் ரூட் கவிதைத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கினேன். முழுவதுமாக இன்னமும் முடிக்கவில்லை என்றாலும், பிடித்த (மொழிபெயர்க்க எளிதான) சில கவிதைகளை மொழிபெயர்த்து வைத்துக்கொண்டேன். இவை அலீனாவின் கவிதை உலகத்தின் முழுமையான பிரதிநிதிகள் அல்ல. இவற்றில் என் அரைகுறை மொழியறிவால் பல புரிதல் குறைபாடுகள் இருக்கலாம். இருப்பினும் மீண்டும் வாசிக்கையில் இவற்றில் கவிதை இருப்பதாகத் தோன்றுவதால் இங்கே பகிர்கிறேன்.

முல்லைப்பூ புரட்சி

அங்கன்வாடிக்குப் போகும்போது
முல்லைப்பூ சூடவேண்டுமென்கிறான்
ரெண்டேமுக்கால் வயதுள்ள சிறுவன்.
“அய்யே, முல்லைப்பூ பொண்ணுங்களுக்கு…”
என்றார் அப்பா.
“அப்படி எழுதியிருக்கா பூ மேல?”
என்றார் அம்மச்சி.
மாலை முற்றத்து மூலையில் விழுந்தன
குட்டி நட்சத்திரங்கள்
அம்மச்சி அவற்றை நீரிலிட்டு அணைத்தார்
‘ஷ்ஷ்ஷ் ஷ்ஷ்ஷ்’ என்று கத்தின
நட்சத்திரங்கள் நீர்மொட்டுக்களாகின.
சிறுவன் வாய்பொத்திச் சிரித்தான்.
பிறகொரு நாள்,
நட்சத்திரம் சூடிய சிறுவனை
எல்லோரும் கேலி செய்தனர்.
அவர்கள் நட்சத்திரம் கண்டதில்லையே!
‘அய்யே, அய்யே’.
சிறுவன் கண்ணில்
நட்சத்திரம் போல
ரெண்டு துளிகள்.
மீண்டும் ‘அய்யே, அய்யே’.

க்ராவிட்டி

உங்கள் வீட்டில் க்ராவிட்டி இருக்கிறதா?
உங்கள் வீட்டில் இருக்கும்,
என் வீட்டில் இல்லாத 
பலவற்றிலொன்று
க்ராவிட்டி.
அது எங்கள் வீட்டில் நிற்காது 
ஒழுகி ஓடும்.
ஒருவரது வியர்வை
எல்லோர் மேலும் நாறும்.
ஒருவர் குளித்தால்
எல்லோரும் குளித்துவிடுவோம்.
கஞ்சி
நிலவொளித் துளிகள் போலே
வீடெங்கும் பறக்கும்.
மேசையும் நாற்காலியும்
உயிருள்ளவை போல
தோணும் இடத்தில் தோணியபடி இருக்கும்.
இங்கே ஒன்றும் 
தொலைந்துபோவதில்லை.
ஒளிந்துகொள்பவற்றை
வீடு வெளியே துப்பிவிடும்.
சுவர்கள்,
ஒவ்வொரு பிரபஞ்சத்தின்
எல்லைகளாகும்.
எங்கள் வீட்டில் 
எதற்கும் மாஸ் இல்லை.
அதனால்
க்ராவிட்டியுமில்லை.

ஊஞ்சல்

‘மரணத்தைக் காட்டிலும் பயப்படவேண்டியது
பிறப்பையல்லவா?’
ஜன்னலில் நின்று ஒரு பேய் கேட்டது.
நான் அப்போது கனவு கண்டுகொண்டிருந்தேனா?
வரைந்து தீராத பாட்டனி ரெக்கார்ட்.
ஒற்றைக் காலுள்ள காம்பவுண்ட் மைக்ரோஸ்கோப்பின் படம்.
டீச்சர் கையெழுத்திட்ட ரெக்கார்டை அப்பா 
போன வாரம் அடுப்பில் போட்டார்.
இனி டீச்சரிடம் என்ன சொல்வேன்?
ஜன்னல் அடித்து சாத்திக்கொண்டது.
‘பிறப்பதற்கு முன்பு
உனக்கு சுகமாக இருந்ததல்லவா?’
பின்னாலிருந்து பேய் கேட்டது.
‘பல்வலி இல்லாமல்,
குடிகார அப்பனில்லாமல்,
தலையில் ஊறும் பேனில்லாமல்,
நீ அப்போது எங்கிருந்தாய்?’
கோத்ரெஜ் பீரோவின்
கண்ணாடியில் பேய்.
கதவு திறக்காமலேயே
இந்தப் பேய் எப்படி உள்ளே வந்தது?
‘பிறப்பு இறப்புகளைக் கடந்த இப்பக்கத்தில்
வாசல்களும் கதவுகளும் கிடையாது.
செல்பவர்கள் வருவதில்லை.
வருபவர்கள் செல்வதில்லை.’
ஒரு பேயோடு அறையில் உட்கார்ந்து
உரையாட வேண்டிய
நிலை எனக்கில்லை.
நான் வெளியுலகிற்கான
எல்லா கதவுகளையும் அடைத்தேன்.
நிசப்தம்.
‘இதுதானா உண்மையான நிசப்தம்?
உனக்குள்ளே நீ அறியாத
ஒரு நீ இல்லையா?’
பேய் எப்போதோ காதுக்குள் ஏறியிருந்தது.
நான் எழுந்தேன்.
‘இதுதான் சமயம்.
இதுதான் மிகச்சரியான சமயம்.’
பேய் எனக்கு ஊக்கமளித்தது.
‘கஷ்டங்களில்லாத வாழ்க்கை,
உன்னுடைய ப்ளான் பி.’
என்றது உத்திரம்.
என் கையில் ஒரு கயிறு
சுற்றிப் பிணைந்திருந்தது.
‘பிறப்புகளைக் கடந்தவொரு ஆலமரத்தில்
நிறைய ஆன்மாக்கள் ஊஞ்சலாடுகின்றன.
நீயும் ஆட வேண்டுமா?’
நானும் ஊஞ்சல் கட்டினேன்.
நானும் ஆடினேன்.
அடுத்த நிமிடம் அமைதி.
அப்புறம்,
முடிவில்லாத நிசப்தம்.

நீலக்கடல்

எனது ஹார்ட் டிஸ்கில்
ஒரு நீலக்கடலுள்ளது.
அதைத் திறந்து எட்டிப்பார்க்கும்
கடலலைகள்
என் கழுத்துவழி
வியர்வைத் துளிகளாகி
ஒழுகும்.
அப்பாவும் அம்மாவும் இல்லாத பொழுதில்
கடல் நத்தைகள்
லாப்டாப்பிலிருந்து இறங்கி
படுக்கையறையைக் கடந்து
வீடு முழுக்க நெளியும்.
நான்
அதில் நனைந்து குளிர் உணர்வேன்.
தொடை வழியே
உப்புரசம் வழியும்.
கடல்நீலத்தில்
செத்ததும் உயிருள்ளதுமென
அனேகம் உடல்கள்
நீந்துவது தெரிகிறதா?
ஒன்றையொன்று சுவாசிப்பதும்
ஒன்றையொன்று தின்பதும்
தமக்குள் கொல்வதும்?
அதில் மூழ்கினால்
நானுமொரு
கடலுயிரியாவேன்.
இன்றெனக்கு
கடல் மட்டம் உயரும் நாளாகும்.

Advertisement

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s