இந்தக் கவிதையை முதல் முறை ஓராண்டுக்கு முன் வாசித்தேன். அப்போது ஏற்படுத்திய உணர்வெழுச்சியை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஏற்படுத்துகிறது. மொழிபெயர்ப்பதற்காக ஒவ்வொரு வரியையும் மிக நெருக்கமாக வாசித்துவிட்டபோதும் அது கொண்டுள்ள மாயாஜாலத்தின் வசீகரம் இன்னும் குறையவில்லை. நான் பெண், நான் எழுத்தாளர் என்றெல்லாம் சொல்லக்கூடிய பல சுய அறிவிப்புகள் சந்தேகத்தை உண்டுபண்ணக் கூடியவை. அவற்றைக் கடந்து இந்தச் சுயத்துடன் எத்தகையதொரு உறவைக் கொள்வது, அதைச் சூழல் அல்லது சமூகத்துடனான தொடர்பிலிருந்து அறுபட்ட ஒன்றாகக் காணாமல், எல்லோவற்றோடும் எல்லோரோடும் தொடர்புபடுத்தி எவ்வாறு புரிந்துகொள்வது, எங்கே வேறுபடுத்துவது? இத்தகைய கேள்விகளை யோசிக்கக் குறிப்பாக இந்தக் கவிதை ஒரு அற்புதமான வெளி. ஜூலியா தெ பர்கோஸ் (1914-1953) ஒரு போர்ட்டோ ரிக்கா கவிஞர்.
நன்றி: நீலம்

ஜூலியா தெ பர்கோஸுக்கு
ஏற்கனவே நான் உன் எதிரியென்று முணுமுணுக்கிறார்கள்,
கவிதையில் உலகத்தை எனக்கே அளித்துக்கொள்கிறேனாம்.
அவர்கள் பொய் சொல்கிறார்கள், ஜூலியா தெ பர்கோஸ். அவர்கள் பொய் சொல்கிறார்கள், ஜூலியா தெ பர்கோஸ்.
என் வரிகளில் எழும் குரல் உனதல்ல, அது என் குரல்;
நீ ஆடை, நானே சாரம்
நம்மிடையே ஓர் ஆழமான பிளவுள்ளது.
நீ சமூகத்துக்கான பொய்யின் உயிரற்ற பொம்மை
நானோ மானுட உண்மையின் தீரமிக்க பொறி.
நீ நன்னடத்தைப் பாசாங்கின் தேன். நானில்லை
நான் என் கவிதைகளிலெல்லாம் இதயத்தைத் திறந்து வைக்கிறேன்.
நீ உன் உலகைப் போலவே சுயநலமி. நானில்லை
நான் நானாக இருக்க எல்லாவற்றையும் பணயம் வைக்கிறேன்.
நீ வெறும் சீரான சீமாட்டி, மேடம், மதிப்புக்குரிய ஜூலியா. நானில்லை
நான் வாழ்வு, உறுதி, பெண்.
நீ உன் கணவனுக்குரியவள், உன் முதலாளிக்கு. நானில்லை
நான் யாருடையவளும் அல்ல, எல்லோருடையவளும், எல்லோருக்குமானவள்
தூய உணர்வுகளிலும் எண்ணங்களிலும் என்னை எல்லோருக்கும் அளிக்கிறேன்.
நீ முடியைச் சுருட்டுகிறாய், முகத்துக்கு அலங்காரம் பூசுகிறாய். நானில்லை
என் முடியைக் காற்று சுருட்டுகிறது, சூரியனே என் அலங்காரம்.
நீ வீட்டின் சீமாட்டி, பட்டும்படாமல் அடங்கிச் செல்பவள்,
ஆண்களின் வெறிக்குக் கட்டுப்பட்டவள். நானில்லை
நான் ரோசினாண்டே[i], சுதந்திரமாய் பாய்வேன், கட்டற்று
கடவுளின் எல்லைகளை முகர்ந்து நீதியைத் தேடிச் செல்வேன்.
உன்னை நீ ஆளவில்லை,
உன்னை எல்லோரும் ஆள்கிறார்கள். உன் கணவன் உன்னை ஆள்கிறான். உன்
பெற்றோர், உன் உறவினர், பூசாரி, தையல்காரன்,
தியேட்டர், காசினோ, கார், நகைகள், விருந்து, சாம்பெயின், வானம்,
நரகம், அய்யோ-அவர்கள்-என்ன-சொல்வார்கள்.
நானில்லை; என்னை என் இதயமே ஆள்கிறது,
என் எண்ணங்கள். என்னை நான் ஆள்கிறேன்.
நீ பிரபுக்களின் மலர். நான் மக்களின் மலர்.
உன்னிடம் எல்லாம் இருக்கிறது, நீ எல்லோருக்கும் கடன்பட்டிருக்கிறாய்.
நான் யாருக்கும் எதையும் கடன்படவில்லை.
நீ அசையா பூர்வீகச் சொத்தில் அறையப்பட்டிருக்கிறாய். நானில்லை
நான் சமூகப் பிரிவினைக் கணக்குகளில் ஒரு எண்ணிக்கை மட்டுமே
விதியால் நெருங்கிவரும் சாவான எதிரிகள் நாம்.
மக்கள் நிறுத்தாமல் கலவரம் செய்யும்போது,
அநீதிகளை எரித்துச் சாம்பலை மட்டும் விட்டுச் செல்லும்போது,
ஏழு விழுமியங்களின் தீவட்டியோடு
ஏழு பாவங்களை விரட்டி கூட்டமாய் ஓடும்போது
உனக்கெதிராய், அநீதியானதற்கும் மானுடத்தன்மையற்றதற்கும் எதிராய்,
அதன் நடுவே கையில் தீவட்டியோடு நானிருப்பேன்.
- ஜூலியா தெ பர்கோஸ்
இலன் ஸ்டீவன்ஸ் மற்றும் ஜாக் அகுயரோஸின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் வழி தமிழில்.
[i] ரோசினாண்டே, செர்வாண்டெசின் புகழ்பெற்ற டான் குயிக்சாட் நாவலின் கதாநாயகன் டான் குயிக்சாட்டின் குதிரை. டான் குயிக்சாட்டைப் போலவே பலவகைகளில் தன் எல்லைகளைக் கடந்து செயல்படும் ஒரு கதாபாத்திரம்.