ஸலாம் அலைக் – ஒரு சிறு குறிப்பு

ஷோபா சக்தியின் ஸலாம் அலைக் நாவலில் இரண்டு கதைகள் இருக்கின்றன. ஒன்று புலம்பெயர்பவர்களின் கதை. இன்னொன்று தேசங்களின் கதை. இருவருமே அவரவர் அளவில் தவறிழைக்கிறார்கள். தனது இருப்பே கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் புலம்பெயரும் ஒருவன் தனது தவறுகள் குறித்த குற்றவுணர்விலேயே குமைகிறான். ஆனால், எண்ணற்ற மனிதர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் இந்த தேசங்கள் என்ற அமைப்புகளுக்கோ, அவற்றின் பிரதிநிதிகளுக்கோ எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை. எல்லைக்கோடுகளின் பெயரால் அவை நிகழ்த்தும் வன்முறைகள், அவற்றின் மனிதத்தன்மையற்ற அலுவலமைப்புகளில் சிக்கிச் சுழலும் மனிதர்களின் வாழ்க்கைகள் சிதைவது இவற்றைக் குறித்தெல்லாம் அவற்றுக்கு எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லை. சொல்லப்போனால் அதை அவை திறன்வாய்ந்த செயல்பாட்டு முறை என்று கருதுகின்றன. பின்னெப்படி தங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது? பின்னெப்படி நீங்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர் என்று உறுதிசெய்வது? இன்னும் பல. ஆனால் இவ்வளவு கேட்கும் அவற்றின் இருப்பை நாம் பதில் கேள்விக்குள்ளாக்குவதும் இல்லை. 

நாம் நிறைய கதைகளைக் கேட்டுவிட்டோம். ஒவ்வொரு முறை ஒரு மானுடப் பிரச்சினை நிகழும்போதும், நாம் தனிநபர்களின் நெஞ்சுருக்கும் கதைகளைத் தேடுகிறோம். அவை மக்கள் எனப்படும் பெருந்திரளின் பிரதிநிதிகளாக நாம் கருதுபவர்களிடம் (பாதுகாப்பான, இயல்பான? ஒரு குடும்ப வாழ்க்கை வாழ்பவர்களிடம்) இவர்களும் உங்களைப் போலத்தான் என நிரூபிக்க முயல்கிறோம். ஆம், இந்தக் கடலில் மூழ்கிய பெண்ணும் ஒரு குழந்தை வைத்திருந்தாள். அவள் குழந்தைக்கு ஒரு நெரிசலான படகில் பாலூட்டிக்கொண்டிருந்தபோதே படகு மூழ்கி இறந்துபோனாள். இன்னுமொரு தாயை நாம் கொல்லப் போகிறோமா! புலம்பெயர்பவர்கள் தாங்கள் தஞ்சக் கோரிக்கை கேட்கும் நாடுகளிடம் கதை சொல்லவேண்டியிருக்கிறது. கதைசொல்லும் துறை சார்ந்தவர்கள் உங்கள் கதை எவ்வளவு நெக்குருக இருக்கிறது என்று அளவிட்டுச் சொல்கிறார்கள். ஸலாம் அலைக்கின் கதாநாயகன் யோசிப்பது போல உண்மையைச் சொன்னால் பத்தாதா என்று நாமும் யோசிக்கிறோம். ஆனால் உண்மையைக் கூட சொல்லத்தான் வேண்டுமா? ஒரு கதை(அது நம்முடையதாகவே இருந்தாலும்) நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்படியான அமைப்புகளை நாம் எவ்வாறு கட்டி மாரடிக்கிறோம்? அவற்றை ஏன் ஏற்றுக்கொள்கிறோம்?

ஸலாம் அலைக்கில் அடிக்கடி சொல்லப்படுவது போல ஒரேயொரு கதைதான் இருக்கிறது. அந்தக் கதையை வைத்து எந்தப் பிரயோசனமும் இல்லை. நம் தேசங்களுக்கு ஏன் குற்றவுணர்ச்சி ஏற்படுவதில்லை என்பதை (வரலாற்றுக் காரணங்கள் குறித்தல்ல, சமகாலம் குறித்து, வன்முறைகள் – எல்லைகளால் ஆன அவற்றின்  இருப்பு குறித்து) நான் பேசுவதில்லை. நமது இருப்பை கேள்விக்குள்ளாக்கும் அமைப்பின் இருப்பை நாம் பதிலுக்கு கேள்விக்குள்ளாக்குவதில்லை. 

கதைகள் பயனற்றவை மட்டுமல்ல. அவை அர்த்தமுள்ள அரசியல் நடவடிக்கைகளுக்கு மாற்றாக நம்மை மரக்கச் செய்யும் மயக்கமருந்துகளாகப் பயன்படுகின்றன என்கிறார் யாஸ்மின் நாயர். அவர் சொல்வது ஒவ்வொரு பிரச்சினை நடக்கும்போதும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மைக் கதைகளை மனமுருகச் சொல்லும் பத்திரிகைத் துறை குறித்து. இலக்கியம் அதிலிருந்து மாறுபட்டது என்றே நாம் கருதி வந்திருக்கிறோம். இலக்கியமே நம்மிலிருந்து வேறுபட்ட வாழ்க்கைகளை நிலங்களை நம்மைப் புரிந்துகொள்ளவைக்கிறது. இலக்கியமும் அதன் கதைகளும் இல்லாவிட்டால் நாம் சக மனிதர்களை எப்படிப் புரிந்துகொள்வோம்? ஆனால் முதலில் வெறுமனே சொன்ன வரியை விட, இரண்டாவதாக கேள்வியாக கேட்கும்போது நமக்கே நம் மானுடம் மேல் ஒரு சிறிய சலிப்பு ஏற்படுகிறது. பிற மனிதர்களிடத்தும், உயிர்களிடத்தும் மைத்ரியோடிருக்க நமக்கு அவற்றின் கதைகள் தேவைதானா? அப்படித் தேவையென்றால் அது நம்மைக் குறித்து என்ன சொல்கிறது?

இலக்கியத்தின் பயன்மதிப்புகள் குறித்த விவாதங்களுக்குள் மேலும் செல்லாமல், இந்த மயக்க மருந்துத் தன்மையை ஒரு நாவல் தன்னளவில் எதிர்கொள்ள முடியுமா என்பதை யோசிக்கலாம். ஏனெனில் ஒரு நாவல் என்பது வெறும் கதையல்ல. அது பல கதைகளைக் கொண்டிருக்கலாம். கதைகளுக்கு எதிராகவே செயல்படலாம். அந்தக் கதையை எப்படி நீங்கள் வாசிக்கிறீர்கள் என்பதை உங்களை யோசிக்க வைக்கலாம்? அப்படி யோசிக்கும்போது ஸலாம் அலைக் நிச்சயமாக தனது கதையின் மயக்க மருந்துத் தன்மைக்கு எதிராக செயல்பட முயன்றிருக்கிறது. தனிமனிதனையும், அல்லது தனிமனிதர்களின் பிரதிநிதி ஒருவனையும் நம் உலகின் எண்ணற்ற தேச அமைப்புகளையும் எதிரெதிரே நிறுத்தி எடைபோட்டிருக்கிறது. இரண்டில் ஒரு பக்கம் மட்டும் மனிதத்தன்மை என்று நாம் நம்பக்கூடிய ஒன்று இல்லை என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது. 

ஸலாம் அலைக் வாங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s