சஞ்சய் சுப்ரமணியனின் இசை குறித்து சுகுமாரன் எழுதிய கான மூர்த்தி கவிதை, இசையின் மகத்தான ஈ இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. சுகுமாரனின் கவிதையில் பாடகர் சமுத்திரத்தில் ஆழ்ந்து மூழ்கி ஆதி அலையைத் தேடுகிறார், எவ்விப் பறந்து ஆகாயத்தின் முதல் விண்மீனைத் துளாவுகிறார். இசையின் கவிதையில் சஞ்சய் நீள்விசும்பினில் உயரப் பறந்தும் மா நிலத்திடை ஆழ உழுதும் பாடுகிறார். சஞ்சயின் 2022 தமிழும் நானும் கச்சேரியை இணையத்தில் கேட்கும்போது இக்கவிதைகளையே நினைத்துக்கொண்டேன். இசையின் ஒரு பாடலில் பாடுவது எது? கவிதையையும். சஞ்சய் பாடும்போது குஸ்தி செய்கிறார், எனக்குத் தெரியும் அந்த குஸ்திதான் பாடுகிறது என்கிறார் இசை. இவற்றை எண்ணிக்கொண்டிருக்கும்போதே தமிழும் நானும் பக்கதிலுள்ள கமெண்ட்களில் இதுவல்லவா மாயா ஜாலம் என்று சுகுமாரன் பதிவிட்டிருந்தார். இதுதானா மாயா ஜாலம்?
இசை நுணுக்கங்கள் குறித்து எனக்கு சொல்லவோ யோசிக்கவோ எதுவுமில்லை. இசை உள்ளும் புறமும் மின்னி நிறையும், மறையும் வெளிச்சமென்பதைக் கடந்து. சஞ்சயின் குரல் நம்முள் நிரம்பும் ஒளியாய் இருக்கிறதென்றால், நெய்வேலி வெங்கடேஷின் மிருதங்கமும் வரதராஜனின் வயலினும் சஞ்சய் கட்டியெழுப்பும் உணர்வுகளில், பயணத்தில் ஒளிபாய்ச்சும் விளக்குகளாக இருக்கின்றன. அவை நம்முன் தோன்றும் இந்த அற்புத மரத்தைக் காணும் கண்களாகவும், தொடும் கைகளாகவும் இருக்கின்றன. அவை நம்மோடிருக்கின்றன, நாமாக இருக்கின்றன. எனவே நான் கண்டுகொண்ட அந்த வெளிச்சத்தை மட்டுமே எழுதவும் யோசிக்கவும் முயல்கிறேன். அந்த வெளிச்சத்தை சொற்களின் வெளிச்சத்தைக் கொண்டு மேலும் தெளிவாக விளங்கிக்கொள்ள முயல்கிறதா என்று பார்க்கிறேன். நீள்விசும்பின் உயரங்களுக்கும் சமுத்திரத்தின் ஆழங்களுக்கும் நாம் ஏன் இட்டுச் செல்லப் படுகிறோம் என்பதை, சமகாலத்தில் வேறு யாரின் இசையிலும் கிட்டாத எந்த ஒன்று ஏன் சஞ்சயிடம் கிட்டுகிறதென்பதை யோசிக்கிறேன்!
சஞ்சயோடு சேர்ந்து மனமும் நாமாம்ருதம் செவிக்கு திவ்யௌஷதம் என்று மனமும் பாடியதை, சில கணங்கள் கழித்து யோசிக்கும்போது சமயங்களில் என் மனம் சற்றே துணுக்குறுகிறது. பெரியார் சொன்னதாக அடிக்கடி பகிரப்படும் கதை ஒன்றுண்டு. பெரியாரிடம் ஒருவர், கடவுள் இல்லை இல்லையென்று சொல்கிறீர்களே, திடீரென்று கடவுள் உங்கள் முன் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டாராம். கடவுள் இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போகிறேன் என்றாராம் பெரியார். எளிமையாக உண்மை, பொய் என்பதைத் தாண்டி நமது நாத்திக உணர்வின் அடிப்படையாக கொள்ளத்தக்க ஒன்று இதிலுள்ளது. கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது நம் பிரச்சினையாக இல்லை. குறிப்பாக நமது கடவுள் அனுபவங்களை மறுப்பதையும் ஏற்பதையும் நாம் யார் என்ற தெளிவான சமூக உணர்வு இல்லாமல் செய்ய இயலாது. அதைச் செய்வதில் சமூகப் பலன் இருக்கிறதா என்பதும் கேள்விக்குரியதே. ஆனால் கடவுளின் அதிகாரத்தை நாம் மறுக்கவே வேண்டியிருக்கிறது. அதுவும் அரசுகளின், நிறுவனங்களின், உறவுகளின் அதிகாரத்தை மறுக்கும் அதே இடத்திலிருந்து.
பிரச்சினை அதுவல்ல, கடவுள் இல்லாத நமது இந்த உலகில் சஞ்சயின் இசை என்ன செய்கிறதென்பதே என் யோசனை! மதுரை சோமு என்ன கவி பாடினாலும் என்று பாடும்போது யாரிடம் உருகுகிறார் என்று யோசித்ததுண்டு, அவர் உண்மையிலேயே முருகனிடம்தான் உருகுகிறார் என்றால் நமக்கு அங்கு என்ன வேலை. ஆனால் நாம் அங்கிருக்க வேண்டும் என்றுதான் சோமுவும் விரும்புகிறார். அப்போது நாமும் அவருடன் சேர்ந்து முருகனிடம் உருகவேண்டும் என்று விரும்புகிறாரா? எப்படியோ நாம் உருகத்தான் செய்கிறோம். அதில் நம் மனதுக்கு சாய்ஸ் தரப்படுவதில்லை. ஆனால் இந்த மூன்றாவது (கடவுளின்) இருப்பு குறித்த பிரச்சினைகளும் கேள்விகளும் சஞ்சய் பாடும்போது எழுவதில்லை. அங்கே சஞ்சய் இருக்கிறார், நாம் இருக்கிறோம். சொல்லப்போனால் சஞ்சய் குஸ்தி செய்வதே நமக்கு இடையிலிருக்கும் வெறும் வெளியோடுதான் என்று தோன்றுகிறது. அவரையும் நம்மையும் பிணைக்கும் அந்தக் காற்றைத்தான் அவர் அப்படி பிடித்திழுக்கிறார்.
சஞ்சய் மொழியைக் கையாளும் விதமும் அலாதியானது. சமீபத்தில் அக்கமாதேவி பாடலொன்றை சஞ்சய் பாடுவதைக் கேட்டேன். கன்னடம் எனக்கு முழுக்கப் புரியாதென்றாலும் சொற்களை ஓரளவுப் பொருள் கொள்ள முடியும். ஏனோ அந்தப் பாடல் என்னை ஈர்க்கவில்லை. அக்கமாதேவியின் சொற்களுக்கும் சஞ்சயின் இசைக்கும் நடுவே ஒரு சுவர் இருந்தது போலிருந்தது. இதில் பிரச்சினை சஞ்சயின் மொழிப் புரிதலா, இல்லை என்னுடைய மொழிப் புரிதலா என்று சொல்லமுடியவில்லை! தமிழ்ப் பாடல்களைப் பாடும்போது இயல்பாகவே சஞ்சய் மிக எளிதாக நம் உணர்வுகளை மீட்டிவிடுகிறார். இளையராஜாவிடம் ஒருமுறை எப்படி உங்கள் இசை எல்லோருக்கும் பிடிக்கிறது என்றதற்கு அவர் இறைவன் ஏற்கனவே உங்களை இந்த இசையை இரசிக்கும்படி டியூன் செய்துவைத்திருக்கிறான், நான் அதையே இசைப்பதால் உங்களுக்குப் பிடிக்கிறது என்றார். இந்த டியூனிங்கை நாம் தமிழ் மனம் என்றழைக்கும் தெளிவான வரையறைகளற்ற ஒரு விசயமாகக் கொண்டால், அதே தமிழ் மனதைத்தான் சஞ்சயும் இசைக்கிறார் என்று கொள்ளலாம். ஆனால் இது அவ்வளவு நேரடியாகத்தான் நிகழ்கிறதா என்பதிலும் எனக்கு சந்தேகங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா என்று சஞ்சய் பாடும்போது அவரது குரலில் வெளிப்படும் உணர்வை ஏக்கம் என்று என்னால் வகைப்படுத்த இயலவில்லை. அப்போது சொற்களின் பொருளுக்கும் பாடப்படும்போது ஏற்படும் உணர்வுக்கும் இடைவெளி இருக்கிறதா? ஆமெனின் அதை ஏன் நம்மால் பாடலைக் கேட்கும்போது உணரமுடிவதில்லை? துன்பம் நேர்கையில் இன்பம் சேர்க்க மாட்டாயா என்று கேட்கும் குரலே நமது துன்பத்தில் இன்பம் சேர்ப்பதை தெளிவாக சொற்களில் எழுதுமளவு நான் பழகவில்லை என்றே நினைக்கிறேன்.
இன்னொரு பக்கம் நாம் அறிந்து பழகிய பல உணர்ச்சிகளை சஞ்சய் பெரும்பாலும் கைக்கொள்வதில்லை. சஞ்சய் எப்போதும் இறைஞ்சுவதில்லை. சஞ்சய் நம்மை நெகிழ வைத்தாலும் அவரது குரலில் எப்போதும் நான் நெகிழ்ச்சியைக் கண்டதில்லை. யோசிக்கும்போது அவர் ஒரு கறாரான பாடகர் என்று தோன்றும். அவர் மிக கறாராக பாடுவதை மட்டுமே செய்கிறார்! அதிலிருந்தே அவர் மகிழ்ச்சியை உற்பத்தி செய்கிறார் என்று. அது அவரது மனதில் இசைக்குறிப்புகளாக, எழுதி வைக்கப்பட்ட ஒரு வரிசையில் செயல்படுகிறதென்று. அது நம்முள் நிரம்பும்போதுதான் உணர்வுகளாக பல்கிப் பெருகுகிறதென்று. செவ்வியல் இசை வடிவங்களின் ப்ளஸ்ஸும் இதுதான் என்று ஒருவழியாக எண்ணிக்கொண்டால், அடுத்து ஏன் பல செவ்வியல் இசைக்கலைஞர்களின் இசை இதே அளவு நம்முள் நிறைந்து பெருகுவதாக இல்லையென்று யோசிக்க வேண்டியிருக்கிறது! அல்லது கர்நாடக இசையோடோ, செவ்வியல் இசையோடோ பரிச்சயம் இல்லாத என்னைப் போன்ற பலரை இரண்டரை மணிநேரம் சஞ்சயின் முன் கட்டிப்போடுவது எது என்பதை. எனவே சஞ்சய் பாடுவதை ஒழுங்கு, ஒழுங்கின்மை என்று வகுத்துக்கொள்வதில் பொருளில்லை என்று கைவிட வேண்டியிருக்கிறது.
கடைசியாக சஞ்சய் மகிழ்ச்சியைப் பாடுகிறார். அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னது போல மகிழ்ச்சியே அவரது இசையின் தத்துவமாக, பொதுவான பேருணர்வாக இருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் நாம் துன்பத்தைப் புரிந்துகொள்வது போல மகிழ்ச்சியைப் புரிந்துகொள்வது எளிதாக இல்லை. துன்பம் ஒரு அரசியல் செயல்பாடாக இருக்கிறது, உர்சுலா லெ குயின் சொல்வதுபோல துன்பம் நம்மை இணைக்கிறது. ஆனால் மகிழ்ச்சியின் ஒளி நம்முள் நிறையும் போது நாம் தனித்திருக்கிறோமா, ஒன்றாக இருக்கிறோமா என்பதை எனக்கு சொல்லத் தெரியவில்லை. என்னுள் நிறைந்து நிறைந்து பெருகும் இதனை இப்போதைக்கு என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும் என்றும் தோன்றவில்லை. சுகுமாரன் எதன்பொருட்டு சொன்னாரோ அறியேன், ஆனால் இதுவல்லவா மாயா ஜாலம் என்று இதன் பொருட்டே நான் சொல்கிறேன். புரிந்துகொண்டுவிட்டால் அப்புறம் என்ன மாயாஜாலம்!