கடவுள் பூமிக்கு வந்த கதைகள் – விஷ்ணு நாகர்

எழுதியவர்: விஷ்ணு நாகர் | ஓவியங்கள்: கேரன் ஹேடாக்

இந்தியிலிருந்து தமிழில்: வயலட்

1

ஒரு அலுவலகத்தின் வராண்டாவில் இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் சொன்னார் “கடவுளோட விருப்பம் இல்லாமல், ஒரு இலை கூட அங்கே இங்கே நகராது.”
கடவுள் அவர்களுக்கு முன்னால் வந்து சொன்னார் “உங்க ரெண்டு பேரையும் பார்த்தா இந்த ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க மாதிரி இருக்கே!”
“ஆமாங்க, சரியாத்தான் சொல்றீங்க” என்றார் ஒருவர்.
“அப்போ, கடவுளோட விருப்பம் இல்லாமலேயே இங்க சில ஃபைல் அங்கயும் இங்கயும் நகருதுன்னு கடவுளுக்குத் தெரியும்” என்றார் கடவுள்.
“அதுக்கென்ன ஆதாரம்?” என்று ஒருவர் கேட்டார்.
”ஆதாரம் என்னன்னா, நான்தான் கடவுள்” என்று சொல்லிவிட்டு கடவுள் அங்கிருந்து மறைந்துவிட்டார்.
அப்போது ஒருவர் இன்னொருவரிடம் சொன்னார் “அப்போ கடவுளுக்கும் இந்த உண்மை தெரிந்திருக்கிறது போலிருக்கே!”
அப்போது பீடி பிடித்துக் கொண்டிருந்த மூன்றாவது ஒருவர் சொன்னார் “மனுஷனுக்கும் இந்த உண்மை தெரியுமே!”
இதைக்கேட்ட இருவரும் “சகோதரரே! நீங்களும் கடவுளா?” என்று கேட்டனர்.
அவர் சொன்னார் “இல்ல, ஆனா எனக்கு கண் தெரியும்!”

2

கடவுள் பூமிக்கு வரும்போது இங்கே அவ்வளவு செலவு ஆகாது என்று நினைத்திருந்தார். ஆனால் அவர் கையில் கொண்டு வந்ததெல்லாம் சீக்கிரமே செலவாகிவிட்டன.

கடவுள் நினைத்தால் ஒரு சொடக்கு போட்டே ஏராளமாக பணம் வரவைக்க முடியும். ஆனால் அவர் கடுமையாக உழைத்து சம்பளம் வாங்கி காசு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார். அவருக்கு வேலை கிடைத்தது, ஆனால் வேலை ரொம்ப கஷ்டமாக இருந்தது.
அன்று நன்றாக வெயில் அடித்தது. வேலை செய்துகொண்டிருந்த எல்லோருக்கும் நன்கு வேர்த்தது, ஆனால் கடவுளுக்கு மட்டும் வியர்வையே வரவில்லை. இதை ஒரு தொழிலாளி கவனித்துவிட்டார். அவர் இன்னொருவரிடம் சொன்னார். இன்னொருவர் மற்றொருவரிடம் சொன்னார். இப்படியே எல்லா தொழிலாளிகளுக்கும் இந்த விசயம் தெரிந்துவிட்டது.
தொழிலாளி உருவத்தில் வந்திருப்பது எப்படியும் கடவுளாகத்தான் இருக்கவேண்டும் என்று தொழிலாளிகள் புரிந்துகொண்டார்கள். அவர்கள் அன்றுதான் ரேடியோவில் “பாபா நாம் எந்த வடிவத்தில் பகவானைப் பார்ப்போம் என்று யாருக்குத் தெரியும்!” என்ற பாடலைக் கேட்டிருந்தனர்.
தொழிலாளிகள் எல்லாரும் அவரைச் சூழ்ந்துகொண்டனர். அவர் காலில் விழுந்தனர். உணர்ச்சிவசப்பட்டு அழத்தொடங்கினர். பாடல்கள் பாடினர். அவரிடம் ஆசிர்வாதம் கோரினர்.
பிரச்சினையில் மாட்டிக்கொண்ட கடவுளுக்கு வேர்க்க ஆரம்பித்துவிட்டது.

3

ஒரு ஊரில் உள்ள பெண் ஒருவர் மிக அருமையாக ரசகுல்லாக்கள் செய்வார் என்றும் அன்றைய நாள் அந்தப் பெண் ரசகுல்லாக்கள் செய்திருக்கிறார் என்றும் கடவுளுக்குத் தெரியவந்தது. கடவுள் அந்தப் பெண்ணின் கணவனுடைய நண்பர் உருவத்தில் அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது அவருடைய கணவன் வீட்டிலில்லை. கடவுளும் அந்தப் பெண்ணும் ஊர்க் கதை உலகக் கதை எல்லாம் பேசினார்கள்.
கடைசியாக அந்தப் பெண் அடுப்படிக்குச் சென்று டீ போட்டுக் கொண்டு வந்தார். இப்போது கடவுள் வெக்கத்தை விட்டு கேட்டே விட்டார் “அண்ணி, உங்க கையால ரசகுல்லா சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு!”
“ஹ்ம்ம்ம்! என்ன செய்யுறது தம்பி, எல்லா பொருளும் விலையேறிப் போச்சு. இப்போ எல்லாம் ரசகுல்லா செய்ய மனசே வரமாட்டேங்குது. அடுத்த வாட்டி செய்யும்போது, நிச்சயமா உங்களுக்குக் கொடுத்துவிடறேன்.”
இந்தப் பெண் எச்சைக் கையால் காக்காய் கூட ஓட்டமாட்டார் என்று கடவுளுக்குப் புரிந்துவிட்டது. அந்தப் பெண்ணின் பொய்க்கு தண்டனைக் கொடுப்பதற்காக வேண்டி, கடவுள் யார் கண்ணுக்கும் தெரியாமல் சென்று எல்லா ரசகுல்லாக்களையும் தின்றுவிட்டார். அவை நல்ல சுவையாகவும் இருந்தன.
மறுநாள் அந்த வீட்டுக்கு பாத்திரம் கழுவி துணி துவைக்க வந்த பெண்ணுக்கு நல்ல அடியும் உதையும் கிடைத்தது.

4

கடவுள் ஒருநாள் டில்லியிலிருந்து தனது குழந்தைப்பருவ ஊரான மதுராவுக்கு ரயிலில் போய்க்கொண்டிருந்தார். அது ஒரு பேசஞ்சர் ரயில். ரயிலில் இருந்தே அவரைச் சில பண்டிதர்கள் பின் தொடர ஆரம்பித்துவிட்டனர்.
கடவுள் மறுபடி மறுபடி சொல்லிப்பார்த்தார், “இங்க பாருங்க, நா அங்க என் சொந்தக்காரங்களப் பார்க்கப் போறேன். நாங்க முன்னாடி அந்த ஊர்லதான் இருந்தோம்.எனக்கு பண்டிதருங்க எல்லாம் தேவையில்ல.” ஆனால் பண்டிதர்கள் விடுவதாக இல்லை, “நீங்க இப்போ மதுராக்காரர் இல்லயே! உங்களுக்கு நிச்சயம் பண்டிதர் தேவை. நாங்க எல்லா வேலையும் சிறப்பா கம்மி காசுல பண்ணிக்கொடுத்திடுவோம். எல்லா கடவுள் தரிசனமும் காட்டித் தர்றோம். நாங்க அந்த காசு புடுங்குற பண்டிதருங்க மாதிரி கிடையாது பார்த்துக்கோங்க” இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
இந்தப் பண்டிதர்கள் விடமாட்டார்கள் என்று புரிந்ததும், கடவுள் தன் உண்மையான சொரூபத்தைக் காட்டினார்.
இப்போது பண்டிதர்கள் சொன்னார்கள், “இப்போ நாங்க உங்களுக்கு ஆரத்தி எடுத்து பூசை எல்லாம் செய்வோம், ஆனா இது பைசா வாங்குற நேரம். உங்களுக்கு மதுரா ஸ்டேஷன்லயும் பண்டிதருங்க கிடைப்பாங்க. எத்தன பேருக்கு உங்க சொரூபத்த காட்டுவீங்க? அங்க இருக்க பண்டிதருங்க உங்கள ஓசில விட்டுற மாட்டாங்க.”
எல்லோரையும் காப்பாறுபவரான கடவுள் பண்டிதர்களுக்குப் பயந்து ரெயிலில் இருந்து குதித்து ஃபதேபுரியில் இருக்கும் தர்மசாலைக்கே திரும்ப வந்துவிட்டார்.

5

ஒருநாள் கடவுள் தெருவில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு குழந்தை அவரிடம் வந்து கேட்டது, “மாமா! மாமா! நீங்கதான் கடவுளா?”
கடவுள் அதிர்ச்சியாகிவிட்டார். அவர் சொன்னார் “ஆமாம் குழந்தை! சொல்லு, நான் யாருன்னு உனக்கு எப்படி தெரிஞ்சுது? நான் இங்க ஒரு வருஷமா இருக்கேன். இதுவரைக்கும் ஒருத்தர் கூட என்ன அடையாளம் கண்டுபிடிக்கல.”
குழந்தை சொன்னது, “நான் சும்மா அப்படியே கேட்டேன். ஆனா கடவுள் எனக்கு ஒரு அநியாயம் செய்திருக்கார்னு தெரியும். அவர் என் அம்மா அப்பா ரெண்டு பேரையும் புடுங்கிக்கிட்டார். கடவுள் ஏன் அப்படிப் பண்ணார்னு எனக்குத் தெரியணும்.”
“அதுக்குக் காரணம்னு எதுவும் இல்ல குழந்தை! …சரி இந்தா, நான் உனக்கு ஒரு அழகான பால் தரேன்.”
“எனக்கு பாலும் வேணாம், வாலும் வேணாம். ஏன் எனக்கு அப்படிப் பண்ணீங்கன்னு சொல்லுங்க?”
“சரி! ரெண்டு தங்க கட்டி தர்றேன் இந்தா. இதனால உன் வாழ்க்கையில கஷ்டம் இல்லாம கொஞ்சம் நல்லா இருக்கும்.”
“எனக்கு எதுவும் வேணாம். எனக்கு என் அம்மா அப்பாதான் வேணும்.”
“குழந்தை! செத்துப்போனவங்க திரும்பி வர மாட்டாங்க. அதுதான் உலகத்தோட நியதி.”

“அவங்களால திரும்பி வர முடியாதுன்னா, எதுக்கு முதல்ல அவங்கள எடுத்துகிட்டீங்க? சொல்லுங்க?”
கோவத்தில் இருந்த அந்தக் குழந்தைகள் தன் குட்டிக் கைகளால் கடவுளை அடிக்க ஆரம்பித்தது, அவரைக் கடித்தது. அவர் ஆடைகளைப் பிடித்துக் கிழித்தது. அவரை உதைக்க ஆரம்பித்தது.
தூரத்திலிருந்து சிலர் இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விசயம் கைமீறிப் போவதைப் பார்த்ததும் அவர்கள் அருகில் வந்தார்கள். குழந்தையை அமைதிப்படுத்த முயற்சிசெய்தபோது, அது இன்னும் கத்தி சொன்னது “இதுதான் கடவுள். இவர் என் அம்மா அப்பாவ என்கிட்ட இருந்து எடுத்துகிட்டார். இப்போ திருப்பிக் கொடுக்க முடியாதுன்னு சொல்றார். இவர அடிச்சுக் கொல்லாம விடமாட்டேன். என்ன விடுங்க.”
கடைசியில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி கடவுள் சொன்னார் “இந்தக் குழந்தை என்னக் கடவுள்னு தப்பா நினைச்சுகிட்டிருக்கு. நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.”
“நீங்க போங்க! நிதானமா போங்க. அம்மா அப்பா இறந்த பின்ன இந்தக் குழந்தை முதல் தடவையா இப்போதான் இப்படி முரண்டு பிடிக்குது. நாங்க இதுக்கு எடுத்து சொல்றோம்.”
இந்த சம்பவத்துக்குப் பிறகு கடவுளுக்குக் குழந்தைகள் என்றாலே பயம். எல்லோர் கண்ணுக்கும் தெரிவார், ஆனால் குழந்தைகள் கண்ணுக்கு மட்டும் தெரியமாட்டார்.

6

கடவுள் ஒருநாள் திடீரென்று ஒரு தொழிலாளியின் வீட்டுக்கு சென்றார். தொழிலாளியும் தன் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினரை நன்றாக வரவேற்றார்.
கடவுளுக்கு அந்தத் தொழிலாளி மேல் மிகவும் கருணை தோன்றிவிட்டது. சத்தம் போடாமல் தான் உட்கார்ந்திருந்த பாய்க்கு அடியில் கொஞ்சம் தங்கக் காசுகளை வைத்துவிட்டுப் போனார்.
பின்னர் தொழிலாளியின் மனைவி பாயை சுருட்டி வைத்தபோது கீழிருந்த தங்கக் காசுகளைப் பார்த்தார். அவர் தன் கணவனிடம் சொன்னார். தொழிலாளி கடவுளைத் தேடிக்கொண்டு போய்ப் பார்த்தார். இங்கே இங்கே கடவுள் போயிருப்பார் என்று தோன்றிய இடங்களுக்கெல்லாம் அங்கே அங்கே போய்ப் பார்த்தார். ஆனால் வந்தது கடவுள்தான் என்று அவருக்குத் தெரியவில்லை.
கடைசியாக சோர்ந்துபோய் தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கப் போனார். தங்கத்துக்குப் பதிலாக போலீஸிடம் அடிவாங்கிக் கொண்டு வந்துசேர்ந்தார்.
தொழிலாளியின் இந்த முட்டாள்தனம் கடவுளுக்குத் தெரியவந்தபோது, அவருக்கு ரொம்ப கோபம் வந்தது.
மறுநாள், கடவுளின் அருளால், தொழிலாளிக்கு வேலை போய்விட்டது என்ற நோட்டீஸ் வந்துசேர்ந்தது.

7

சுவர்க்கத்தில் சில தினங்களாக சுத்தம் சுகாதாரத்தில் ஏதோ பிரச்சினை, அதனால் அங்கே கொசுக்கள் பிறந்துவிட்டன.
சுவர்க்கத்தில் கடவுள் தவிர வேறு யாரும் இல்லை. எனவே கொசுக்கள் வேறு வழியில்லாமல் தங்களுக்கு உயிர் கொடுத்தவரையே உணவு கொடுப்பவராகவும் ஆக்கிக்கொள்ள வேண்டி வந்தது. அதாவது, அவை கடவுளின் ரத்தத்தையே குடிக்கத் தொடங்கின. கடவுள், கடவுள் ஆகையால், அவரது ரத்தம் சுவையாகவும் ஊட்டச்சத்திகள் நிறைந்ததாகவும் இருந்தது. கொசுக்கள் நன்றாக கடவுள் ரத்தம் குடித்து பெரிதாக வளர்ந்தன. ஆமைகளைப் போல உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ந்தன.
பூமியைப் போல கடவுள் தனக்கு வேண்டியபடி யாரையும் சுவர்க்கத்தில் கொல்லவும் முடியாது. சுவர்க்கம், சுவர்க்கம் இல்லையா, அங்கே யாரையும் கொல்ல முடியாது. சில கடவுள்கள் ரகசியமாக கொசுக்களை அடித்தும் பார்த்தார்கள், ஆனால் அவை சாகவில்லை. அவையும் கடவுளைப் போல மரணமில்லாத வாழ்க்கையைப் பெற்றுவிட்டன. தினமும் அவை கடவுளின் ரத்தத்தை அல்லவா குடித்து வளர்ந்து வந்தன.
நிலைமை எப்படி ஆகிவிட்டதென்றால் சுவர்க்கத்தில் கடவுள் இருப்பதா இல்லை கொசுக்கள் இருப்பதா என்று கடவுள் யோசிக்கும்படி ஆகிவிட்டது. நிறைய யோசித்துப் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். சுவர்க்கத்தில் கொசுக்களே இருந்துகொள்ளட்டும், கடவுள் பூமிக்குப் போகலாம் என்று முடிவெடுத்துவிட்டார். இங்கே கொசுக்களை எளிதாகக் கொல்ல முடிவது மட்டுமில்லை, அவற்றை விரட்டியடிப்பது கூட கஷ்டமில்லை.


பிடிஎஃபாக பதிவிறக்க:

கேரன் ஹேடாக்கின்: சின்ன சிவப்பு கோழி, இன்னும் சில சிறார் புத்தகங்கள்.

இந்தியில் வாசிக்க, மற்றும் கேரன் ஹேடாக்கின் பிற ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்க.

இந்தக் கதை/ஓவியங்கள் க்ரியேட்டிவ் காமன்ஸ் ஷேர் அலைக் காப்புரிமம் கொண்டவை. உரிய பெயர்களைக் குறிப்பிட்டு, இலாபமில்லாத செயல்பாடுகளாக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் படைப்புகள் இதே காப்புரிம அடிப்படையில் பகிரப்படவேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s