எல்லோருக்கும் இடமுள்ள கித்தான்கள் – அதிவீரபாண்டியனின் ஓவியங்கள் குறித்து

நீலம் ஏப்ரல் மாத இதழில் வெளியான கட்டுரை.

”எனது கலை என்னையும் உங்களையும் பற்றியது; மனிதம் முழுவதையும், நம்மைப் பிணைக்கும் அன்பு என்ற அழகிய பிணைப்பையும் குறித்தது… எனது கித்தானில் எல்லோருக்கும் இடமிருக்கிறது. நான் கண்டடைந்த, கண்டடையப் போகும் வண்ணங்கள் எல்லாம் எனக்குத் தெரிந்த மனிதர்களையும், நான் இன்னும் பெறாத நண்பர்களையும் போன்றவை. வண்ணங்கள் எனக்கு மக்களாக, நிலப்பரப்புகளாக, உணர்வுகளாக, மற்றும் தூய்மையான எளிமையான அன்பைப்போன்று இன்பம் தரும் எல்லாமுமாகத் தோன்றுகின்றன. வண்ணங்கள் ஓடி ஒன்றோடொன்று கலந்து உருமாறும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன்… ஒரு கலைப் படைப்பின் அதிமுக்கியச் செய்தி அன்புதான், சுற்றிலும் எந்த பூடகமான வட்டங்களும் சதுரங்களும் இல்லாமல், இயற்கையின் தூய இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் கட்டற்ற அன்பு.”

அதிவீரபாண்டியன்

எழுத்தின் இன்பம் என்பது அதிகம் வாசிப்பதிலேயே இருக்கிறது. கதைகளானாலும் சரி, கட்டுரைகள் என்றாலும் சரி, எதிர்பாராத அல்லது எதிர்பார்த்த ஒரு திசையில் வாதமோ பிம்பங்களோ உருவாவதை எதிர்கொள்வதில்தான் இன்பம் இருக்கிறது. எழுத்தை உருவாக்குவதிலும் இன்பம் இருக்கிறதென்றாலும், அது எவ்வளவு திருப்தி தருவதாக அமைகிறது என்பதன் அடிப்படையில் இருக்கிறது. நம் மனதில் எண்ணியபடி அமையாத எழுத்து இன்பம் தருவதாக இல்லை. ஆனால் ஓவியமோ இசையோ அப்படியில்லை. அவற்றில் மிக இயல்பான இன்பம் ஒன்றிருக்கிறது. எண்ணற்ற காகிதங்களும் வண்ணக் குப்பிகளும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் கொடுக்கப்பட்ட குழந்தையின் மனநிலையை எண்ணிப் பாருங்கள். ஆனால், அதிலிருக்கும் இன்பத்தை ஒரு ஓவியத்தால் தன் பார்வையாளருக்கு நினைவுபடுத்த முடியுமா? அதிவீரபாண்டியனின் ஓவியங்களில் சில அதையே நினைவூட்டின. அந்தப் புள்ளியில் இருந்துதான் அவற்றின் மீதான் என் ஈர்ப்பும் தொடங்கியது. காட்சியை, கற்பனையை, நினைவை ஓவியமாக ஆக்குவது மட்டுமல்லாமல், இந்த ஓவியங்கள் ஓவியம் செய்தல் என்ற செயல்பாட்டிலிருந்தே காட்சியை, கற்பனையை, நினைவை உருவாக்குகின்றன.

சென்னையைச் சேர்ந்த ஓவியர் அதிவீரபாண்டியன் சென்னை கவின்கலைக் கல்லூரியில் பயின்றவர். 1990 தொடங்கி இந்தியாவின் பல நகரங்கள், லண்டன் என பல்வேறு ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தனது கல்லூரிக் காலம் தொடங்கி அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் வரையும் இவர், நமது காலத்தின் மிக முக்கியமான அப்ஸ்ட்ராக்ட் ஓவியர்களில் ஒருவர். அவரது ஓவியங்கள், அதுவும் நேரில் பார்க்கும்போது மிக எளிமையான, ஆனால் ஆழமான மகிழ்ச்சியை நம்முள் விளைவிக்கின்றன. கித்தானின் மேல் ஒரு நிலப்பரப்பு போல பல வண்ணங்களின் அடுக்குகளாக அமைந்துள்ள அவை வண்ணங்களாகவும், வண்ணங்களில் அந்த அடுக்குகள் நிழலாகவும் ஒளியாகவும் ஏற்படுத்தும் தோற்றங்களையும் சேர்த்து நமக்குள் ஓவியமாக உருக்கொள்கின்றன.

அதிவீரபாண்டியனின் ஓவியங்களை மேம்போக்காக நான் இரண்டு வகைமைகளுக்குள் அடங்குவதாக பிரித்துக் கொள்கிறேன். முதலாமது முழுக்க வண்ணங்கள் ஒன்றையொன்று ஆதரிப்பதைச் சார்ந்திருப்பவை. அதாவது ஒரு ஓவியத்தில் அவர் பயன்படுத்தும் வண்ணங்கள் எல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையவாக, அவற்றுக்கு இடையிலான உறவு ஒன்றையொன்று ஆதரிப்பதாக அமைந்திருப்பவை. இரண்டாவதில் அவை ஒன்றுக்கொன்று வேறுபடுவதாக அமைந்திருக்கின்றன, அவற்றில் வண்ணங்களை விட அவை அமைக்கப்பட்டிருக்கும் விதம் கவனம் பெறுகிறது. நான் இக்கட்டுரை முழுக்க முதல் வகையில் பொருந்துவதாக எனக்குத் தோன்றும் ஓவியங்களைக் குறித்தே பேசுகிறேன். அவையே எனக்கு மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன. அவற்றில் வெளிப்படும் அமைதியான, திறன்வாய்ந்த கலைத்தன்மை ஒவ்வொரு முறையும் என்னை வியக்கச் செய்கிறது.

ஒவ்வொரு நல்ல ஓவியத்தோடும் ஒரு பார்வையாளர் பல்வேறு வகையான உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அது இல்யா ரெப்பினின் வோல்கா நதிக்கரையில் கப்பலைக் கரைக்கிழுப்பவர்கள் ஓவியம் போன்று மிக நேரடியான உருவக ஓவியமாக இருந்தாலும் கூட, உடலுழைப்பு, அந்தக் காட்சியின் காலத்திலிருந்து நம் காலத்துக்கான தொழில்நுட்ப வித்தியாசம், அதைக் கடந்தும் அந்த உடலுழைப்பின் சுரண்டல் அந்நியமாகத் தோன்றாமல் இருப்பதன் சமூக அரசியல் நிலை, ஒரு அதிகாலை, உழைக்கவேண்டிய அதிகாலை எனப் பலவும். களைப்பு, சோர்வு, அந்நியமாதல் என உணர்வுகளுக்கான பிரதிபலிப்பாகவும் அந்தக் காட்சி அமையலாம்.

அதிவீரபாண்டியனின் ஓவியங்களை எதிர்கொள்ளும்போது மிக இயல்பாகத் தோன்றுவது நமது உணர்வுகளுக்கான பிரதிபலிப்பாக அவற்றைக் காண்பது. தனிப்பட்ட முறையில் நமக்கு சில வண்ணங்கள், சில உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. அவை நமக்கு நேரடியாக எந்தக் காட்சியும் காட்டுவதில்லை என்ற இயல்பான எதிர்வினையைக் கடந்து, இந்த ஓவியங்களை அணுகும்போது, அவை நமக்கு சில உணர்வுகளை ஏற்படுத்துகின்ற, நினைவுபடுத்துகின்றன என்று தோன்றுகிறது. இந்த தோற்றம் முழுக்க ஏற்கத்தக்க ஒரு வாசிப்புதான் என்றாலும் அதைக் கடந்தும், அல்லது வேறொரு வழியில் அவற்றை அணுகவேண்டி இருப்பதாகவே தோன்றியது.

இன்னொரு வழக்கமான முறை ஜான் பெர்கர் ஓவியங்களுக்கும், டிராயிங்குகளுக்குமான வித்தியாசமாகக் குறிப்பிடுவது. ஓவியத்தில் பார்வையாளர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறாள் என்றால், டிராயிங்கில் அவள் ஓவியருடன் அடையாளப் படுத்திக் கொள்கிறாள். டிராயிங்கை வரைந்த ஓவியர் எதைப் பார்த்திருப்பார், நினைவுபடுத்திக் கொண்டிருப்பார் என்பதை புரிந்துகொள்ள அல்லது உணர முயல்கிறாள். அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களை எதிர்கொள்கையில் இந்த இரண்டாவது முறைக்கு மனம் அடிக்கடித் தாவுகிறது. அதை வரைந்த ஓவியர் எதை எண்ணி வரைந்திருப்பார் என்பது. இவை இரண்டும் ஒருவகையில் ஓவியங்களை, தீர்க்க வேண்டிய ஒரு புதிராகக் கருதுவது. மிகவும் நிறைவளிப்பதும் கூட.

இந்த ஓவியம் எனக்கொரு பூவிலிருந்து பறக்க எத்தனிக்கும் சிறு பறவையை நினைவூட்டுகிறது. ஒரு வசந்தகாலத்தில் பூக்கள் நிறைந்த பள்ளத்தாக்கொன்றின் நடுவிலிருக்கும் பாறையை. அல்லது யானையை. இவ்வாறு நான் ஏற்கனவே அறிந்த காட்சிகளுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதும் உண்டு.

இந்த கட்டுரைக்கு முதலில் கடல் மேல் பெய்யும் மழை என்றே தலைப்பிட நினைத்திருந்தேன். ஆனால் அது நம்மிடையே வழக்கமாக வீணாகப் போகும் மழை என்ற பொருளில் வழங்குவதால், எந்த விளக்கங்களும் இல்லாமல் அதனோடு தொடங்க விரும்பவில்லை. அதிவீரபாண்டியன் தொடர்ந்து கடலை கவனித்துக் கொண்டே இருக்கிறார். அது கடலைச் சுட்டும் ஓவியங்களில் மட்டுமில்லாமல், எல்லாவற்றிலுமே எதிரொலிக்கிறது.

இந்த ஓவியங்களுடனான எனது உறவை இவ்வாறே தொடர்ந்து யோசித்தால் அது சில திறப்புகளை அளிக்கக்கூடும்தான். அப்படிச் சொல்ல ஒவ்வொன்று குறித்தும் என்னிடமொரு கதையும் இருக்கிறது. ஆனால் இன்னொரு பார்வையாளருக்கு அது எந்த வகையிலும் உதவப்போவதில்லை, அவளுக்கு இந்த ஓவியங்களை எவ்வழியிலும் நெருங்க உதவப் போவதில்லை.

ஓவியரும் அதே மனநிலையை, காட்சியை ஒட்டி வரைந்திருப்பார் என்று அறியக்கிடைக்கும்போது ஒரு நிறைவு ஏற்படுகிறது. ஒரு புதிரை அவிழ்க்கும் நிறைவு. ஓரு பார்வையாளராக அதில் எக்குறையும் இல்லை என்றாலும், உங்களது புதிர்களை நீங்கள்தான் அவிழ்க்க வேண்டும். ஒரு கட்டுரையாளராக நான் அதைச் செய்வதில் புண்ணியமில்லை. மேலும் அதிவீரபாண்டியன் நேரடியாக அப்படி எதையும் அறியத் தருவதில்லை. நான் பார்த்த வரையிலான ஓவியங்களுக்கு தலைப்புகளும் இல்லை.

எனக்கும் ஓவியத்துக்குமான பரிச்சயம் மிகவும் குறைவே. முதன்முறை அதிவீரபாண்டியனின் ஓவியங்களை ஒரு கண்காட்சியாகப் பார்த்தபோது, மேற்கூறிய முறையில் அவற்றை இரசித்தேன் என்றாலும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு கண்காட்சி என்ற சூழல், அவரது ஓவியங்களை இரசிக்கும் நண்பர்கள் என இவற்றின் அழுத்தம் இல்லாவிட்டாலும் இந்த ஓவியங்களுக்கு அர்த்தம் இருக்குமா என. அந்தக் கண்காட்சிக்குப் பின்னான இந்த நான்கு வருடங்களில் அச்சூழலிருந்து போதுமானளவு அந்நியப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இப்போது மீண்டும் அதிவீரபாண்டியனின் ஓவியங்களை நினைவுபடுத்திக்கொண்டு அவற்றைத் தேடி டிஜிட்டல் திரைகளில் பார்த்தபோது அவற்றில் இன்னமும் ஈர்ப்பிருந்தது. இன்னமும் தொடர்ந்து அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கத் தோன்றியது.

எனவே நான் வெறுமனே எனது உணர்வுகளைப் பிரதிபலிப்பதைத் தாண்டி அவை என்ன செய்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயன்றேன். ஏனெனில் உணர்வுகள், நினைவுகள் நம்பகத்தன்மை மிகுந்தவை அல்ல. ஒரு படைப்பின் மீது அவை ஏறி ஏறி மெல்ல அந்தப் படைப்பை நம்மிடமிருந்து விலக்கி விடுகின்றன. அதுவும் உறுதியான காட்சிகளை வெளிப்படுத்தாத படைப்புகளுடனான உறவு மிக மெல்லிய இழைகளாகவே இருப்பதாக தோன்றியிருந்தது. மேலும் ஒரு படைப்பு முழுக்க பார்வையாளரை நம்பியிருக்கும்போது, அதன் உள்ளார்ந்த கலைத்தன்மை மீது நமக்கு கேள்வி எழுகிறதல்லவா. எங்கே அதிவீரபாண்டியனின் ஓவியங்கள் அதைக் கடக்கின்றன என்று புரிந்துகொள்ள முயல்கிறேன்.

பெரும்பாலும் அதிவீரபாண்டியனின் ஓவியங்களுக்கு மையப்புள்ளி(கள்) இல்லை. அவற்றில் கோடுகள் இல்லை. அவை கித்தானின் எந்த ஒரு இடத்திலும் தொடங்கி இன்னொன்றுக்கு செல்வதில்லை. அவற்றின் தொடக்கமும் முடிவும் கித்தானின் நீள அகலங்களுக்குள் பொருந்துவதில்லை. அவை நீங்கள் பார்க்கத் தொடங்கி, பார்த்து முடிக்கும் கால இடைவெளியில்தான் தொடங்கி முடிகின்றன, தங்களது பயணத்தை மேற்கொள்கின்றன. எனவே நான் அதிவீரபாண்டியன் ஓவியங்களுடன் இவ்வாறுதான் உரையாடுகிறேன். முதல் பார்வையில் எனக்குத் தோன்றுவதென்ன. தொடர்ந்து அதனுடன் நேரம் செலவழிக்கும்போது வேறென்னென்ன கவனத்துக்கு வருகின்றன. ஒரு கட்டத்தில் முடிந்தது என்று தோன்றும்போது அதுவரை தோன்றிய எண்ணங்கள், கற்பனைகள் எல்லாம் ஒன்றோடொன்று பொருந்திப் போகும் அனுபவத்தை விளங்கிக் கொள்ளும் முயற்சி.

ஓவியரே தனது நேர்காணலொன்றில் சொல்வது போல இந்த ஓவியங்கள் தமக்குள்ளே ஒரு சமநிலை வாய்க்கப்பெற்றவை. இந்த சமநிலை இயற்கையோடு, அல்லது நம் சமூகச் சூழலோடு, இயைந்ததாக இருக்கிறது. இதேபோன்ற சமநிலையை வேறு சிலரின் அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களிலும் காணலாம் என்றாலும், அவை அதிகமும் முழுக்க மனித மூளையின், நமது பார்வையின் வழியாக கற்பனை செய்யப்பட்ட சமநிலையாக இருக்கிறது. அல்லது பிற கலை வடிவங்களிலிருந்து, ஜியாமெட்ரியிலிருந்து உருவானதொரு சமநிலை. அதிவீரபாண்டியன் தனது சமநிலையை இயற்கையிடமிருந்து நமது கூட்டுக் கற்பனையிடமிருந்து பெற்றுக்கொள்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது. அல்லது அவரது கற்பனை தனித்த மனித மூளைக்குள் மட்டுமே நிகழும் கற்பனையாக இல்லாமல் (அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்கள் அதற்கான வாய்ப்பை வழங்கினாலும்) இயற்கையோடு, நிலப்பரப்போடு, மனிதத்தோடு எதிர்வினை புரியும் கற்பனைகளாகவே உள்ளன.

இத்தகைய ஓவியங்களை எதிர்கொள்ளும் போது ஏற்படும் இன்னொரு கேள்வி, இவற்றின் சமூக மதிப்பென்ன? நமது சமூகம் போன்ற தினசரி வாழ்க்கையை, இருப்பை கேள்விக்குள்ளாக்கும் சூழலில் நேரடியாக அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்படுத்தாத ஓவியங்களின் மதிப்பென்ன? இவை நேரடியாக எந்த அரசியல் நிலைப்பாடையும் சொல்லவில்லை என்பது தெளிவு. இந்த இடத்தில் கலை விமர்சகரான மாக்ஸ் ரஃபேலின் வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொள்ளலாம். கலை நம்மை படைப்பிடமிருந்து படைக்கும் செயலிடம் கொண்டுசெல்கிறது. எனவே அது நமக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உலகைக் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. நம் சூழல், நிலை, உலகு அது ஏற்கனவே சென்றுகொண்டே இருக்கும் அதே பாதையில்தான் செல்ல வேண்டுமா என்று யோசிக்கத் தூண்டுகிறது. இவ்வாறு உலகை ஒரு நிலைத்த பொருளாக இல்லாமல், உருவாகிக் கொண்டிருக்கும் விசயமாக ஆக்குகிறது. இவ்வாறு நாம் விடுதலையடைந்து, பிற தனிமைப்படுத்தப்பட்ட ஜீவன்களிடையே தனிமைப்பட்ட ஜீவனாக இருப்பதிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கும் ஆற்றலின் பகுதியாக மாறுகிறோம் என்கிறார் ரஃபேல். இதனையே நான் அதிவீரபாண்டியனது அப்ஸ்ட்ராக்ட் ஓவியங்களின் அரசியல் செய்தியாகவும் உணர்கிறேன்.

எல்லா ஓவியங்களுமே இந்த படைப்புச் செயல்பாட்டைக் குறித்து சிந்திக்கத் தூண்டும் கூறுகளைத் தம்மகத்தே கொண்டிருக்கின்றன என்றாலும், இவ்வோயியங்களில் அவை வெளிப்படையாக அமைந்திருக்கின்றன. அவை நம்மை நேரடியாக இந்தப் படைப்புச் செயல்பாட்டைக் குறித்து சிந்திக்க அழைக்கின்றன.

ஒவ்வொரு பூவிலும் காடு இருக்கிறது தானே. அதாவது ஒரு பூ தனியாக பூத்துவிடுவதில்லை, அதோடு இலைகளும், வேர்களும், மரங்களும், மழையும் மண்ணும் எல்லாம் இருக்கின்றன. இந்த தொடர்பை எவ்வாறு ஒரு ஓவியக் கித்தானில் பிரதிபலிப்பது. அதிவீரபாண்டியன் யோசிக்கும் வழியானது, பூவைச் சுற்றியுள்ள கோடுகளை எடுத்துவிடுதல். இலைகளை, வேர்களை, மரங்களைச் சுற்றியுள்ள கோடுகளையும். ஒரு யதார்த்த நிலப்பரப்பு ஓவியத்தை வரையும் ஓவியர் தனது கித்தானில் மண், கல், மரங்கள், வானம், நீர் எல்லாவற்றையும் அமைத்து அவற்றுக்கு கனமும் திண்மையும் அளிக்கிறார் அல்லவா. அதிவீரபாண்டியன் அதற்கு மாறாக அவற்றை கனமிழக்க செய்கிறார். அப்போது அவை வெறும் வண்ணங்களாக மிச்சம் இருக்கின்றன. சுற்றி எந்தக் கோடுகளும் இல்லாதபோது அவற்றுக்கு அந்த கித்தான் முழுக்கவே சுற்றி வருவதற்கான வெளிதானே? எனவே அந்த வண்ணங்கள் ஒன்றோடொன்று உறவாடுகின்றன. பயணம் போய் வருகின்றன. அதிலிருந்து கடைசியாக கிடைக்கும் ஓவியத்தில் கடல் எது, மழை எது என்று யோசித்துக் கண்டுபிடிக்கலாம்தான். ஆனால் அத்தோடு நிறுத்திவிடாமல், கோடுகளை நீக்கிவிட்டதால் நடந்த ரசமாற்றத்தை யோசிக்கும்போது அது நம்மையும் விடுதலையடையச் செய்யும்.

இங்கே நான் அதிவீரபாண்டியனின் ஓவியங்கள் என்று பொதுவாகப் பேசியிருந்தாலும், இக்கட்டுரை மிகச்சில ஓவியங்களைக் குறித்ததே. அவரது படைப்புலகம் இதைவிட விரிவானது. உதாரணத்திற்கு சமநிலை என்பது எதிர்மறை இல்லாமல் அமைவதில்லை. அவரது ஓவியங்களில் எதிர்மறை, ஒழுங்கின்மை போன்றவை எப்படிச் செயல்படுகின்றன என்பவற்றைக் குறித்து வேறு சில ஓவியங்களை எடுத்துக்கொண்டும், இயற்கையைக் கடந்து பெருநகரச் சூழலை அவை எதிர்கொள்ளும் விதத்தையும் மேலும் நிறைய பேசலாம்.

இப்போதைக்கு கடைசியாக, 2015இல் வந்த ஒரு நேர்காணலில் அதிவீரபாண்டியன் சொல்லியவற்றில் இருந்து சில வரிகள். “வண்ணங்கள் இயல்பாக வருகின்றன. எந்த வண்ணத்துக்கும் நான் எந்த சிறப்பு அர்த்தமும் கொடுக்க விரும்புவதில்லை. எனது ஓவியங்கள் நிலப்பரப்பின் அப்ஸ்ட்ராக்ட் வடிவங்கள் போன்றவை. எல்லா ஓவியங்களையும் ஒரே மனநிலையுடன்தான் அணுகுகிறேன். நேரத்தையும் அசைவையும் பொருத்து, கித்தானில் ஒரு சமநிலை சேர்கிறது. ஒரு ஓவியத்தை எப்போது தொடங்கவேண்டும், எப்போது முடிக்கவேண்டும் என்று எனக்கு எப்போதுமே தெரியும், ஒரு மலர் விரிவதைப் போல.”

உங்களுக்கு இந்த ஓவியங்கள் புதிராகத் தோன்றினால், இந்த வார்த்தைகளைத் திறவுகோலாகக் கொண்டு அணுகலாம். நீங்களும் என்னைப் போல கடல் மேல் பெருநகர் மேல் பெய்யும் மழையையும், பூடகமான வடிவங்களைக் கடந்த விடுதலையையும் கண்டுகொள்ளலாம். அவை உருவாகும் பொழுதில் உடனிருக்கலாம்.

All images taken from ArtHouz Gallery website. https://www.arthouz.com/t-athiveera-pandian/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s