ஆல்பர்ட் காம்யூ: கொள்ளைநோய் நம் அனைவரின் பிரச்சினை

க்ரிஸ்டியன் வில்லியம்ஸ். Autonomies தளத்தில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

இனி வெறும் குறியீடல்ல: ஆல்பர்ட் காம்யூவின் த ப்ளேக் நாவலை மீண்டும் வாசித்தல்

ஒரு தொற்றுநோயின் தாக்கத்தால், ஊரடங்கில் இருக்கும் நகரம் ஒன்றின் சித்திரமே ஆல்பர்ட் காம்யூவின் த ப்ளேக் (The Plague) நாவல். எந்த தர்க்கமுமின்றி முடக்கப்பட்ட, நியாயமற்று குறைக்கப்பட வாழ்வுகளைப் பற்றி, நோயாலும் சட்டத்தாலும் தனிமைப்படுத்தப்பட்ட மனிதர்களைப் பற்றி, பதட்டங்களையும், பற்றாக்குறைகளையும், நம்பிக்கையின்மையையும், நாயகத்தன்மையுடைய தியாகங்களையும் பற்றி நமக்குச் சொல்கிறது இந்த நாவல். மனித வாழ்க்கையைப் பற்றிய ஒரு இருண்மையான சித்திரத்தை அளித்தாலும், மனிதர்களைப் பற்றிய ஒரு நம்பிக்கையூட்டும் சித்திரத்தையே அளிக்கிறது. ஒரு தெளிவான நீதியுடன் முடிகிறது, அதாவது “நாம் கொள்ளை நோய்க் காலத்தில் கற்பது” என்னவென்றால் “மனிதத்தில் வெறுப்பதை விட நேசிக்கவே நிறைய இருக்கிறது.”

இந்த நாவல் பல மனிதர்களின் வாழ்வைப் பின் தொடர்கிறது – குறிப்பாக ரியுக்ஸ் என்ற மருத்துவர்; ராம்பர்ட் என்ற பத்திரிகையாளராக வேலை பார்க்கும் முன்னாள் ஸ்பானிய உள்நாட்டுப் போர் வீரர்; டாரோவ் என்ற அமைதியாளராக மாறிய கம்யூனிஸ்ட்—அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, நேசத்துக்குரியவர்களிடம் இருந்து பிரிந்திருந்து தம்மால் முடிந்த விசயங்களைச் செய்கிறார்கள். பொதுமக்களின் உடல்நலத்தைப் பேணவும், தொற்று பரவலைக் கட்டுக்குள் வைக்கவும் முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சிக்கு இத்தகைய நபர்கள் பொறுப்பேற்க வேண்டி வருவது அதிகாரிகளின் தோல்விகளைக் குறித்து நிறையவே சொல்கிறது, அதிகாரம் குறித்த காம்யூவின் பார்வையையும் பிரதிபலிக்கிறது.

தொற்றுநோய் குறித்த அதிகாரபூர்வ எதிர்வினை காலந்தாழ்ந்து, தெளிவற்று, குழுப்புவதாக, குறைபாடுடையதாக இருக்கிறது. அதிகாரிகளின் செயலற்ற தன்மை சாதாரண மக்களை அசாதாரணக் காரியங்கள் செய்ய நிர்பந்திக்கிறது. முன்னாள் கம்யூனிஸ்ட் டாரோவ் மருத்துவர் ரியுக்ஸைச் சந்திக்கும் இந்த இடம் ஒரு திருப்புமுனை. “சுகாதாரத் துறை திறனில்லாமல் இருக்கிறது, முக்கியமாக போதுமான ஆட்கள் இல்லாமல் இருக்கிறது. கட்டாயமாக ஆளெடுக்கும் திட்டத்தை அதிகாரிகள் யோசிப்பதாக கேள்விப்பட்டேன்” என்கிறார் டாரோவ். ரியுக்ஸ் அது உண்மைதான் என்று ஒப்புக்கொள்கிறார், ஆனால் துறைத்தலைவர் முடிவெடுக்க முடியாமல் உறைந்து போயிருக்கிறார் என்று சொல்கிறார்.

டாரோவ் தொடர்ந்து கேட்கிறார்

கட்டாயப்படுத்தி ஆளெடுக்கும் ரிஸ்க்கை எடுக்க வேண்டாமென்றால், தன்னார்வலர்களின் உதவியைக் கேட்க வேண்டியதுதானே?

[ரியுக்ஸ் பதிலளிக்கிறார்] அதுவும் செய்தாயிற்று. பெரிதாக யாரும் வரவில்லை.

அதை அதிகாரபூர்வ வழிகளில் அரைமனதாகச் செய்தார்கள். [டாரோவ் சுட்டிக்காட்டுகிறார்.] அவர்களிடம் குறைவது கற்பனைதான். உண்மையிலேயே பயங்கர ஆபத்தான ஒன்றை அதிகார அமைப்புகளால் கையாளவே முடியாது. இவர்கள் யோசிக்கும் தீர்வுகள் எல்லாம் சாதாரண ஜுரத்துக்கே போதாது. இவர்களை இப்படியே விட்டால் சீக்கிரம் செத்துவிடுவார்கள், நாமும் சாக வேண்டியதுதான்.

பின் டாரோவ் ஒரு திட்டத்தை முன்வைக்கிறார்:

உதவி செய்பவர்களின் தன்னார்வலக் குழுக்களுக்கான திட்டம் ஒன்றை நான் உருவாக்கியிருக்கிறேன். என் திட்டத்தை முயற்சி செய்யும் ஆற்றலைக் கொடுங்கள், பின் அதிகார அமைப்புகளை ஓரம் கட்டலாம். எப்படியும் அதிகாரிகளின் கரங்கள் வேலைகளால் நிரம்பியிருக்கின்றன. பலதரப்பட்ட நிலைகளில் இருக்கும் நண்பர்கள் உண்டு எனக்கு; அவர்கள் ஒரு வித்து அமைப்பைத் தொடங்குவார்கள். நானும் கலந்துகொள்கிறேன்.

டாரோவ் உருவாக்கும் அமைப்பு பல்வேறு பொறுப்புகளை ஏற்கிறது. அவர்கள் “மருத்துவர்கள் வீடுவீடாக செல்லும்போது துணைக்குச் சென்றார்கள், நோய் தாக்கப்பட்டவர்களை வெளியேற்றினார்கள், தொடர்ந்து ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் நோயாளிகளையும் பிணங்களையும் கொண்டுசெல்லும் வாகனங்களையும் ஓட்டினார்கள்.” அவர்கள் தங்கள் வேலையை விடாமுயற்சியுடன் தொடர்ந்து செய்தனர். ஆனால் இந்த முயற்சிகள் கொள்ளை நோய் குறைவதில் எந்தளவு பங்காற்றின, அல்லது பிளேக் நோய் தன் இயல்பான கால அளவு நடந்து முடிந்ததா, என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. அது எப்படி இருந்தாலும், இந்த சுகாதாரக் குழுக்கள் அதைவிட ஒரு முக்கியமான நோக்கத்துக்கு உதவின:

இந்தக் குழுக்கள் நம் ஊர்க்காரர்கள் இந்த நோயை எதிர்கொள்ள ஆற்றல் கொடுத்தன, பிளேக் நம்மிடையே பரவிவிட்ட நிலையில், அதை எதிர்த்துப் போராட ஆனதைச் செய்யவேண்டியது அவர்கள் பொறுப்பு என்று அவர்களை நம்பவைத்தன. எனவே இவ்வாறு, பிளேக் சில ஆட்களின் கடமையான போது, அது உண்மையில் என்ன என்று தெரியவந்தது; அது அனைவரின் பிரச்சினையும்தான்.

பிளேக் வெறும் பிளேக் அல்ல. அது நாஜி அடக்குமுறைக்கு ஆளான பிரெஞ்சு அனுபவமும் கூட. அப்போது அதிகாரபூர்வ எதிர்வினை சரணடைந்து ஒத்துழைப்பது என்பதாகவே இருந்தது. எனவே காம்யூ போன்ற பொதுமக்கள் தாங்கள் பொறுப்பேற்று ஒரு எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்க வேண்டியிருந்தது.

இந்த ஒப்புமை தீர்க்கமானது மட்டுமல்ல, ஆழ்ந்த தாக்கங்கள் கொண்டது. காம்யூ ஃபாசிசத்தை – அல்லது கொலையை நியாப்படுத்தும் எந்த நம்பிக்கை அமைப்பையும் – மனிதம் முழுமைக்குமான ஆபத்தாகவே பார்த்தார். மட்டுமின்றி, எவரையும் பாதிக்கக்கூடிய, மனிதர்கள் பரப்பக்கூடிய ஒன்றும் கூட. இந்த விசயத்தில் அவரது சிந்தனையின் தீர்க்கம் கிட்டத்தட்ட மெய்ஞானத் தன்மையிலானது: வாழ்க்கையை ஆதரிக்க நாம் மரணத்தை எதிர்க்க வேண்டும். மரணம் என்னும் உண்மையை ஏற்பது கூட, தற்கொலைக்கு நிகரானது, கொலையைப் போன்றது; அது மரணத்தை அதன் எல்லா வடிவங்களிலும் ஏற்பதாகும். மரணத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக மனிதத்தின் மதிப்பை ஆதரிப்பதே எப்போதுமுள்ள சவால். அதுவும் அத்தகையதொரு போராட்டம் இறுதியில் தோல்வியில் முடியும் என்று தெரிந்தே செய்வது. இதற்கு ஒரு போராட்ட மனம் வேண்டும், எனவே காம்யூ தன் நம்பிக்கைகளை அதிகாரிகளிடமோ நிறுவன அமைப்புகளிடமோ வைக்கவில்லை, சாதாரண மனிதர்களின் இதயங்களில் நம்பிக்கை வைத்தார்.

இந்த கொள்ளை நோய்க் காலத்தில் த பிளேக் நூலை மீண்டும் வாசிக்கும்போது, அதற்கொரு புதிய முக்கியத்துவம் கிடைக்கிறது. அது இப்போது வெறும் குறியீடல்ல. கோவிட்-19 நோயின் தாக்குதலில் இருந்து பிழைக்க நம் நம்பிக்கைகள் சமூக படிநிலைகளின் உயரத்தில் இருப்பவர்களின் நடவடிக்கைகளை மட்டும் நம்பியிருக்க முடியாது. அவர்கள் முடிவுகள் பெரும்பாலும் போதாமையுடனும் கொடுங்கோன்மையுடனே இருக்கும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர் போன்றாரை நம்பமுடியாது. எப்படியிருந்தாலும் அவர்கள் சட்டங்கள், அதிகார அமைப்புகள், போலீசை நம்பியிருக்க வேண்டிய தீர்வுகளையே முன்னெடுப்பார்கள். காம்யூவின் சிந்தனை வழியில், அவர்கள் தொற்றுநோயின் இன்னொரு வகையான அறிகுறிகள் மட்டுமே, தொற்றுநோய் மருத்துவ சூழ்நிலை மட்டுமல்ல, அரசியல் மற்றும் மெய்யுணர்வு சார்ந்த நிலையும் கூட.

அதற்கான தீர்வு என்று ஒன்று கிடைக்குமானால் அது மருத்துவ அறிவியலை மட்டும் நம்பியிருக்க முடியாது, சமூக ஆதரவையும் நம்பியிருக்க வேண்டும். நாம் பிழைத்திருப்பது, நமது சக பணியாளர்களின், பக்கத்துவீட்டுக் காரர்களின் நடவடிக்கைகளையும் நம்பித்தான் இருக்கிறது. எந்த அதிகாரமும் பதவியும் இல்லாத, ஆனால் அதிகாரிகளின் கட்டளைகளையும், தலைவர்களாக அறிவித்துக் கொண்டவர்களின் போதனைகளையும் மீறி உறுதியுடனும் இயல்பான அறிவோடும் செயல்படும் மக்களை நம்பியிருக்கிறது. அறிவிக்கப்படாத வேலைநிறுத்தங்களில் நூலகர்கள், மின்பணியாளர்கள், கழிவுநீர் மேலாண்மைப் பணியாளர்கள், குப்பை சேகரிப்போர், துரித உணவகப் பணியாளர்கள், பஸ் ஓட்டுநர்கள், குடோன் பணியாளர்கள், கறிவெட்டும் பணியாளர்கள் போன்றோர் தங்கள் முதலாளிகள் மறுப்பையும் மீறி பணியிடங்களை மூடி தொற்றுநோய்ப் பரவலைத் தடுத்துள்ளார்கள். நாடு முழுவதும் (அமெரிக்கா) உள்ள மக்கள் பரஸ்பர உதவிக் குழுக்களை அமைத்து கையிருப்புகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள், அண்டைவீட்டுக்காரர்களை கவனித்துக் கொள்கிறார்கள், குவாரண்டைனில் இருப்பவர்களின் தேவைகளை பார்த்துக்கொள்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள், அதிகாரபூர்வ முடிவுகளை எதிர்பார்த்திருக்க வேண்டிய தேவையில்லை, இருக்கவும் கூடாது. இத்தகைய கணங்களுக்குள் வேறுவிதமான ஒரு சமூகத்தை அமைக்கும் வாய்ப்பின் நம்பிக்கையும் இருக்கிறது, அதில் அதிகாரிகள் ஓரம் கட்டப்படுவார்கள், சாதாரண மக்கள் தங்கள் ஆற்றலைக் கண்டுகொள்வார்கள், அங்கே நாம் நமது அடிப்படைத் தேவைகளுக்கு ஒருவரையொருவர் நம்பியிருப்போம், அதிகாரிகளை அல்ல.

ஒருவேளை அப்போது காம்யூவின் ஒப்புமையை நிஜமாகலாம்: கொள்ளைநோயோடு போராடும் வழிமுறைகளும், ஃபாசிசத்தோடு போராடும் வழிமுறைகளும் ஒன்றெனத் தெரிய வருமோ என்னவோ.

Featured image: Photograph: Loomis Dean/Time & Life Pictures/Getty Images

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s