டேவிட் கிரேபர் – ஒரு சிறிய அஞ்சலிக் குறிப்பு

சில ஆண்டுகளுக்கு முன் டேவிட் கிரேபரின் புல்ஷிட் ஜாப்ஸ் கட்டுரையை மொழிபெயர்க்க வேண்டிவந்தபோதுதான் முதல்முறையாக கிரேபரைப் படித்தேன். இந்தக் கரோனா நாட்களின் புல்ஷிட் ஜாப்ஸ் – அர்த்தமற்ற வேலைகள் என்ற அக்கட்டுரை மீண்டும் உலகெங்கும் கவனம் பெற்ற ஒன்றானது. பல்வேறு துறைகளில் வேலை இழந்தவர்கள், வீட்டிலிருந்து வேலைசெய்ய வேண்டி வந்தவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் அல்லது தாங்கள் கனவாய் அமைத்துவைத்திருந்த பல வேலைகள் முழுமையுமே எப்படி அர்த்தமற்றவை என்பதையும், தங்கள் அலுவலக வேலைகளில் குறிப்பிடத்தகுந்த பகுதி எப்படி அர்த்தமற்ற அதிகாரத்துவ சுழல்களில் சிக்கி உழல்வது என்பதை உணர ஆரம்பித்ததின் வெளிப்பாடே அது, செவிலியர், சுகாதாரப்  பணியாளர் உள்ளிட்ட சரியாக ஊதியமளிக்கப்படாத, சமூக மரியாதையளிக்கப்படாத, இந்தச் சூழலில் கடுமையான அழுத்தத்துக்கும் மனிதத்தன்மையற்ற சூழல்களுக்கும் ஆளாக்கப்படும் பணிகளும் நிதி மேலாண்மை போன்ற அர்த்தமற்ற ஆனால் சொகுசான வேலைகளும் ஒப்பிடப்பட்டன. கிரேபர் முதலில் சிறு கட்டுரையாகவும் பின் முழுமையான நூலாகவும் எழுதியது அது. இந்தக் கரோனா சூழல் முடிவுக்கு வராத, எப்பொழுது முடிவுக்கு வரும் என்று தெரியாத காலத்திலேயே கிரேபர் இறந்துவிட்ட சேதி வந்துசேர்ந்திருக்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த டேவிட் ஒரு அராஜகவாதச் சிந்தனையாளர், மானுடவியலாளர், செயல்பாட்டாளர், நம் காலத்தின் மிக அபூர்வமான, தீவிரமான, கனிவான குரல்களின் ஒன்று டேவிடினுடையது.

ஆந்த்ரே குருபாசிக்குடன் இணைந்து, பீட்டர் கிரபாட்கினின் பரஸ்பர உதவி புத்தகத்தின் மறுபதிப்புக்கு கிரேபர் எழுதிய அறிமுகம் இவ்வாறு முடிகிறது:

”ஒரு புதிய உலகை உருவாக்க, நாம் நம் கண்களின் முன்னால் இருப்பதை, எப்போதும் இருந்துவருவதை மறுகண்டுபிடிப்பு செய்வதில் இருந்தே தொடங்க முடியும்.”

கிரேபரின் எழுத்துகளில் இருந்து பெற்றுக்கொண்டதில் முக்கியமானது என்றும் இதையே சொல்லத் தோன்றுகிறது. அராஜகவாத சிந்தனையை குழப்பமான சொல்லாடல்களில் சிக்கிக்கொள்ளாமல், எளிமையாக நிலத்திலும் வரலாற்றிலும் நிலைகொண்ட ஒன்றாகப் புரிந்துகொள்ள கிரேபரின் எழுத்துகளே உதவின. தொடர்ந்து வாசிக்கும்போது, ஜனநாயகம் போன்ற விசயங்களில் கிரேபரின் கருத்துகளை மறுக்கும் விவாதங்கள் ஏற்கத்தக்கனைவயாக மாறியிருக்கின்றன. ஆனால் அவையும் கிரேபருடனான விவாதங்களாகவே செழுமைபெற்று முன்னகர்ந்திருக்கின்றன.

சில வாரங்கள் முன்பே கிரேபர் உடல்நலமில்லாததைப் பதிவுசெய்திருக்கிறார். ஆனாலும் அவரது மரணம் எவரும் எதிர்பார்த்திராதது. மிகவும் நேசிக்கும் பிற எழுத்தாளர்களிடம் தோன்றாத ஒரு நண்பனை இழந்த உணர்வு கிரேபரின் மரணத்தில் தோன்றுகிறது. அவரது கட்டுரைகளைத் திருப்பி வாசிக்க முயலும்போது, அந்த சிந்தனைகளை எழுதிய சக மனிதன் இதே உலகில் இதே நேரத்தில் யோசித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு இல்லாமல் போவதன் இழப்பு உணரத்தக்கதாக, அழுத்துவதாக இருக்கிறது. கிரேபர் எப்பொழுதும் தன் எழுத்துகளை, அறிவை பீடத்தில் வைத்தவரில்லை, வாழ்வதைப் போலவே யோசித்தவர். பல்வேறு போராட்டங்களில் மற்றுமொரு தோழனாக பங்களித்தவர்.

அராஜகவாதக் கம்யூனிசம், அனார்க்கோ சிண்டிக்கலிசம் தொடங்கி அர்த்தமற்ற அராஜகவாத முதலாளித்துவம் வரை பல சிந்தனைப் போக்குகள் நிலவும் சூழலில், தன்னை சிறிய ஏ- அனார்க்கிஸ்ட் என்று அழைத்துக்கொண்ட கிரேபரின் அராஜவாதம் வெறும் அடையாளப் பெயர்களை மையமாகக் கொண்தல்ல. உலகை அதிகாரத்தின் கட்டுகளைத் தாண்டி வரையறை செய்வதையும், மாற்றி அமைப்பதையும் குறித்து எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி கற்பனை செய்தது. ஏற்றத்தாழ்வுடைய படிநிலைகளை அமைக்காமல், சமமான உரையாடலுக்குத் தயாராக இருக்கும் அனைத்து பரந்துபட்ட இடது அரசியல்களோடும் உரையாடியது.

வாரத்துக்கு பதினைந்து மணிநேரங்கள் மட்டுமே வேலை, பறக்கும் கார்கள் என்று எண்பதுகளில் செய்யப்பட்ட கற்பனை உலகம் வராமலேயே இருப்பதற்குக் காரணம் அது சாத்தியமற்றது என்பதாலா, இல்லை நமது அரசியல், அதிகாரத்துவ அமைப்புகள் அதில் ஆர்வற்று இருப்பதாலா என்பதை யோசிக்க வைத்தவர் கிரேபர். தான் பார்த்து, படித்து வளர்ந்த அறிவியல் கதைகள் குறித்த ஆச்சரிய உணர்வை இழக்காத மனநிலையோடு நம் காலத்திய அதிகார அமைப்புகளைக் கேள்வி கேட்க அவரால் முடிந்தது.

கிரேபரின் முக்கியப் பங்களிப்பு, நம்மைச் சுற்றியிருக்கும் அதிகார அமைப்புகளின் கட்டுப்பாடுகளைத் தாண்டி கற்பனை செய்யவும் யோசிக்கவுமான தளங்களை ஏற்படுத்திக் கொடுத்தது. த யுடோபியா ஆஃப் ரூல்ஸ் புத்தகத்தில், இடதுசாரி அரசியல்களில் அதிகாரத்துவ அமைப்புகள் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுவதை, அரசாங்கங்கள் தொடங்கி தனியார் நிறுவனங்கள் வரை நம் தினசரி வாழ்க்கையில் பியூரோகிரசியின் பங்கை கேள்விக்குள்ளாக்குவது தொடங்கி, மானுட வரலாற்றில் வேட்டையாடி வாழ்ந்தவை பொற்காலம் விவசாயத்திலிருந்தே ஏற்றத்தாழ்வுகள் தொடங்கியது என்பதை மறுத்து, ஏற்றத்தாழ்வுகள் அதற்கு முன்னும் இருந்திருக்கின்றன, அவை அதிகார அமைப்புகளுக்காக எப்போது நிலைபெற்றன என்பதை சிந்திக்கத் தூண்டியது, தனது கடன் – ஐயாயிரம் ஆண்டுகால வரலாறு புத்தகத்தில் பண்டமாற்று முறை, பணத்தில் உருவாக்கம் என நாம் இயல்பாக உண்மையென்று கருதிக்கொண்டிருக்கும் வரலாற்றின் பக்கங்களை மானுடவியல் துணைகொண்டு கேள்விக்குள்ளாக்குவது வரை கிரேபரின் எழுத்துகளின் அடிப்படையாக அதுவே தோன்றுகிறது.

கடன் புத்தகத்தையும் மயிலை சீனி வெங்கடசாமியின் தமிழர் வாணிபம் புத்தகத்தையும் படித்துவிட்டு பண்டமாற்று குறித்து எழுதி வைத்திருந்த குறிப்புகளில் இவ்வாறு எழுதி வைத்திருந்தேன்:
ஆனால் இந்த வித்தியாசங்களுக்கெல்லாம் இப்போதைய பயனென்ன? நம்முடைய தற்போதைய முதலாளித்துவ பொருளாதார முறையானது, தனக்கு மாற்றில்லாததாகவே எல்லாரையும் நம்ப வைக்கிறது. ஒரு முழுமையான மாற்றுப் பொருளாதார அமைப்பைக் கற்பனை செய்யும் எல்லா முயற்சிகளும் கற்பனாவாதம், நடைமுறைக்கு ஒவ்வாதது என்று ஓரங்கட்டப் படுகின்றன. கொரோனா மாதிரியான காலகட்டத்திலும் அரசாங்கம் பணத்தை அச்சிட்டு, அதை நிறுவனங்களுக்கு அளித்து, விலைபேசி முடிவுசெய்துதானே உயிர்காக்கும் கருவிகளை வாங்க வேண்டியுள்ளது. நம் சூழலில் இதைக் கடந்த பொருளாதார அமைப்புகளைக் கற்பனை செய்யும் சிலரும் பண்டமாற்றை, ஒரு மாற்று முறையாகக் கருதி அதனடிப்படையில் செயல்பட விழைகின்றனர். அல்லது பண்டமாற்று ஒரு கடந்துபோன பொற்காலமாக, திருப்பிக் கட்டமைக்கப்பட வேண்டியதாக, தேசிய இனவாதப் பெருமைகளோடு இணைக்கப் படுகிறது.

எனவே பண்டமாற்று என்பது தற்போதைய சூழலின், பொருளாதார அமைப்புகளின் கற்பனையில், அவற்றின் இருப்பை நியாயப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு கடந்தகாலத்தின் மேல் திணிக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வது நமது கற்பனையின் எல்லைகளை விரிவாக்க உதவும். ஒரு புதிய, இன்னும் இயல்பான எல்லாருக்குமான இயங்குமுறையைக் கற்பனை செய்வதன் வழியாகவே நாம் ஒரு புதிய அரசியலைக் கற்பனை செய்யவும், கட்டமைக்கவும் இயலும் அல்லவா.

இவை வாசகனாக நான் அறிந்தது. மானுடவியல் அறிஞராக, செயல்பாட்டாளராக கிரேபரின் வாழ்க்கை பல பரிமாணங்கள் கொண்டது.

இந்தக் காரணங்களுக்காகவே கிரேபரை தொடர்ந்து வாசிக்கவும், விவாதிக்கவும் விழைகிறேன். வெறுமனே வாசித்து அறிந்ததிலிருந்தே கனவுகள் நிறைந்த கண்களும், ஆர்வமுடைய, சிறு நகையுணர்வுடைய பேச்சுமான ஒரு தோழனின் சித்திரம் மனதில் பதிந்திருக்கிறது. மடகாஸ்கரில் மூதாதையர்களின் ஆவியுடன் பேசும் ஒருவர் வழியாக, ‘ஆவி’களிடம் பணத்தைக் கண்டுபிடிக்கும் முன் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று கேட்டு, பண்டமாற்று செய்தோம் என்று சொல்லும் ஆவியைப் பற்றிச் சொல்லி, ஆடம் ஸ்மித் உருவாக்கிய கதை எவ்வளவு பலமானது பாருங்கள், அவருக்கு முன் வாழ்ந்த ‘ஆவி’களும் அதையே சொல்கின்றன என்று சிரிக்கும், எப்போதும் தொலைதூரப் பயணங்களிலிருந்து திரும்பிவந்து உலகைப் பற்றிய நம் பார்வையை மாற்றும் கதைகளைச் சொல்லும் நண்பனுடையது. அதனுடன் இழப்பின் அதிர்ச்சியைக் கடந்தும் தொடர்ந்து உரையாட வேண்டியிருக்கிறது.

From: Crimethinc https://crimethinc.com/2020/09/03/the-shock-of-victory-an-essay-by-david-graeber-and-a-eulogy-for-him

உலகைக் காப்பாற்ற நாம் உழைப்பதை நிறுத்தவேண்டும் – டேவிட் கிரேபர்

முதலாளித்துவம் அர்த்தமற்ற வேலைகளை உருவாக்குவது ஏன்? – டேவிட் கிரேபர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s