மருத்துவர் ஷாலினியின் திருநர் வெறுப்பும், போலி அறிவியலும்

கடந்த செம்படம்பர் மாதம், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் போன்றோருடன் டாக்டர் ஷாலினி பங்கேற்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதுகுறித்து எழுத்தாளர் கிரீஷ் இவ்வாறு எழுதியிருந்தார்.

தற்போது, ஓரிரு நாட்கள் முன் ‘திருநம்பிகள் பற்றி தெரியுமா?’ என்ற தலைப்பில் ஷாலினி பேசும் ஒரு வீடியோ, தோழி என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கிறது. திருநம்பிகள் குறித்து என தலைப்பிடப்பட்டிருந்தாலும், முதல் மூன்று நிமிடங்கள் போல திருநங்கைகள் குறித்தே ஷாலினி பேசுகிறார். சரி, தமிழ்ச் சூழலில் திருநங்கைகள் குறித்த அறிதல் அதிகம் என்பதால் என்று எடுத்துக்கொண்டாலும், அவர் பேசும் எதையும் உண்மை என்றோ, திருநர் மக்களுக்கு உதவியானது என்றோ கருதவே முடியாது.

ஷாலினி அவர்களின் பார்வை அறுவைசிகிச்சையை மையமாகக் கொண்டதாகவே தெரிகிறது. அதாவது ஒரு திருநர் தன் பாலின அடையாளத்தை உறுதிசெய்ய அறுவைசிகிச்சை அவசியம் என்பதுபோல, இதைமட்டுமாவது அவர் நேரடியாகச் சொல்வதில்லை. மேலும், அவரது பார்வைகள் முழுக்க ஆண்களை மையப்படுத்தியே இருக்கிறது. அதாவது பிறப்பில் ஆண் என வரையறுக்கப்பட்டவர்களை குறித்த தன் பார்வையைக் கொண்டே பல்வேறு அடையாளங்களைக் கொண்ட பால்புதுமைச் சமூகம் முழுவதையும் அணுகிறார். இவர் ஒரு மருத்துவர் என்பதால், இத்தகைய பார்வை பலரின் வாழ்வை பாதிக்கும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

இந்தக் காணொளியில் அவர் தொடர்ந்துகூறும் சிலவற்றைப் பார்க்கும் முன், அவர் பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் இது. 2008இல் எழுதப்பட்ட ஆங்கில வலைப்பதிவு ஒன்று தொடங்கி, கருக்கள் உருவாகையில் பெண்ணாகவே உருவாகின்றன. முதல் ஆறு வாரம் எல்லா கருக்களும் பெண்ணே. அதன்பின்னரே, Y க்ரோமோசோம் தோன்றும் கருக்களில் விதைப்பைகள் உருவாகி, அனைத்து செல்களும் ஆணாகிறது என்கிறார். இதை எல்லா காணொளிகளிலும் திரும்பத் திரும்ப சொல்கிறார். இதை மருத்துவர்கள் எவரும் மறுத்தெழுத முடியும். இது அறிவியலுக்குப் புறம்பானதுமாகும்.

இது குறித்து மருத்துவர் ஒருவர் எழுதிய பதிவொன்றிலிருந்து //… மிகவும் கண்டிக்கத்தக்கது திருநங்கை, திருநம்பிகள், ஒருபால் ஈர்ப்புடையோர் பற்றி அவர்[மரு.ஷாலினி] பேசி வரும் அறிவியலுக்கு ஒவ்வாத பிற்போக்கு கருத்துக்கள். முக்கியமாக அவர் திரும்பத் திரும்ப பேசும் கோட்பாடு : “இயற்கை வடிவமைப்பில் முதலில் உருவாவது பெண், அது பரிணாம வளர்ச்சியாக இருந்தாலும் சரி, எம்பிரியோலஜியாக இருந்தாலும் சரி ஆரம்பத்தில் எல்லா சிசுக்களும் பெண் வடிவில்தான் உருவாகிறது” இந்த கோட்பாட்டில் எந்த உண்மையும் இல்லை. முதல் சில வாரங்களில் எல்லா கருவும் Paramesonephric duct மற்றும் Mesonephric duct எனப்படும் பெண் மற்றும் ஆண் உடல் உறுப்புகளாக மாறும் கூறுகள் இரண்டையுமே பெற்றிருக்கும். முதல் வரியே தவறு அனால் Dr.ஷாலினி மேலும் தொடர்ந்து, ‘சில வாரங்களுக்கு பிறகு ஆண் கருவில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஆணாக மாறும்’ என்கிறார். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் பாலினம் இருக்கிறது என்று இதுவரை இந்த உலகில் விஞ்ஞானிகள் மட்டும் அல்ல ஹீலர் பாஸ்கர்கள் கூட கூறியிருக்கமாட்டார்கள். இந்த தவறான புரிதலை அடிப்படையாய் வைத்து பால்புதுமையினர் பற்றி பிற்போக்குக் கருத்துக்களை பரப்பி வருகிறார். மேலும் திருநங்கை, திருநம்பிகள், ஒருபால் ஈர்ப்புடையோர்களை ‘குணப்படுத்திவிடலாம்’ என்று நவீன மனநல மருத்துவம் புறம் தள்ளிய வலதுசாரி பிற்போக்குக் கருத்தை தன்னை திராவிட சிந்தனையாளர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு செய்து வருகிறார்.//

இதன் அடிப்படையிலேயே பல்வேறு நிலைகளில் இந்த ஆணாவது தடைபடும் கருக்கள், திருநங்கைகளாக, ஒருபாலீர்ப்புடைய ஆண்களாக வளர்கின்றனர் என்கிறார். உடற்கூறியலை மையப்படுத்தியே பேசினாலும், ஷாலினி இண்டர்செக்ஸ் மக்களைக் குறித்து பேசக் காணோம்.

திருநம்பிகளுக்கு, இந்த போலி அறிவியலையும் அவர் அளிப்பதில்லை. பெரும்பான்மை திருநம்பிகள் சமூகத்தில் ஆண்களுக்கிருக்கும் நிலையைக் கண்டு ஆணாக மாற முயலும், போராட்டகுணமுடைய பெண்கள் அவ்வளவே. பெண்ணுடலில் ஆண் ஹார்மோன்களைச் செலுத்துவது கழிவிரக்கம் கோபத்தைத் தூண்டும். பால்மாற்று சிகிச்சைகள் கடினமானவை. உங்கள் மனநலத்தையும் உடல்நலத்தையும்விட ஆண், திருநம்பி என நிரூபிக்க முயல்வது முக்கியமல்ல. ஒரு அடையாளத்துக்காக எவ்வளவு தியாகம் செய்வீர்கள் என ஆதாரங்களற்ற பலவற்றையும் பேசுகிறார்.

சில மாதங்கள் முன் இப்படித்தான் நந்தினி கிருஷ்ணன் என்பவர் திருநம்பிகள் சமூகத்தைப் பற்றி புத்தகம் எழுதுகிறேன் பேர்வழி என எழுதிய புத்தகம் வெளியானது. பலரின் அனுமதி இல்லாமல் அவர்களது சொந்தக்கதைகளை எழுதியது. தனது இந்துத்துவ அரசியலுக்கு ஏற்ப அவர்களது கதைகளை திரித்தெழுதியது என பலவற்றையும் செய்தார். ஷாலினி அவர்கள் முனைவர் பட்டம் பெற்ற மருத்துவர். இந்திய மனநலக் குழுமத்தில் பாலியல் மருத்துவம், எய்ட்ஸ் சிறப்பியல் ஆகியவற்றுக்கான முக்கியப் பொறுப்பொன்றிலிருப்பவர். மனநலம் குறித்த ஒரு தொண்டு நிறுவனம் நடத்துபவர். எழுத்தாளர். தமிழ்ச் சூழலின் மிகப் பிரபலமான மனநல மருத்துவர். பெரியாரிய, பெண்ணியவாதி.

தற்போது பெரியார் இருந்திருந்தால் இந்த போலி அறிவியல் குறித்து என்ன சொல்லியிருப்பார். எதிர்பாலீர்ப்பை மையமாகக் கொண்டே எல்லாவற்றையும் பார்த்திருப்பாரா? பிறப்பில், கருவில் திணிக்கப்படும் அடையாளங்களை ஏற்றிருப்பாரா? பெரியாரிய வாதிகள் எந்தக் கேள்வியுமின்றி ஷாலினியின் கருத்துகளை ஏற்கிறார்களா?

மரு.ஷாலினி ஒருபாலீர்ப்பு குறித்து என்ன சொல்கிறார்? இங்கும் பிறப்பில் ஆணாக வரையறுக்கப்பட்டவர்களிலேயே கவனம் செலுத்துகிறார். லெஸ்பியன் பெண்கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருக்கிறார்களாம். பின், கே ஆண்கள் நல்லவர்கள், எதிர்பாலீர்ப்புடைய ஆண்களால் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள், துறவேற்பவர்கள், வெளிநாட்டுக்கு ஆராய்ச்சியென செல்பவர்கள் எல்லாம் கே என பலவற்றையும் சொல்கிறார்.

முக்கியமாக, இந்த கருத்தை முன்வைக்கிறார். ஆண்கள் இரு காரணங்களால் ஒருபாலீர்ப்புடையவர்களாக ஆகிறார்கள். 1) சிறுவயதில் பிற ஆண்கள் வல்லுறவுக்குள்ளாக்கப் படுதல் 2) அது அவர்கள் மூளையில், உடலில் பிறப்பால் ஊறிய ஒன்று.

இந்த 1) வகை ஆட்களை மருத்துவம் மூலம் குணப்படுத்திவிட முடியுமாம். 2) வகையை குணப்படுத்த இதுவரை மருத்துவம் இல்லை. எதிர்கால அறிவியல் வளர்ச்சியில் கிடைக்கலாம். அதுவரை அவர்களை குணப்படுத்த முயன்று துன்புறுத்தவேண்டாமென பாசமாகச் சொல்கிறார். இந்த எல்லாவற்றிலுமே எதிர்பாலீர்ப்பே இயல்பு, ஒருபாலீர்ப்பு இயல்புக்கு மாறானது, குணப்படுத்தவேண்டியது என்ற கருத்துகளையே வெளிப்படுத்துகிறார். இவை எல்லாம் மேற்குறிப்பிட்டவைபோல, பிற்போக்கான, போலி அறிவியல் கருத்துகள். எந்த ஆதாரமுமற்ற இவை, பால்புதுமைச் சமூகத்தினரின் அடையாளத்தை, சுயமரியாதையைக் கேள்விக்குள்ளாகும் மறுக்கும் கருத்துகள்.

இவை எல்லாம் பரந்த வீச்சுடைய தளங்களில் நடக்கின்றன. இங்கே இவருக்கு எதிராக பால்புதுமையினரின், உண்மையான அறிவியல் பேசும் மருத்துவத் துறையினரின் குரலை முன்னிறுத்தவேண்டியது பத்திர்கையாளர்களின் கடமை. ஒவ்வொரு முறை பொய்யையும், வெறுப்பைத் தூண்டும் பிரச்சாரத்தையும் எதிர்கொள்ள என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யவேண்டும்.

இதுகுறித்து குயர் சென்னை க்ரோனிகிள்ஸ் நிறுவனர் மௌலி எழுதிய மேலும்சில மற்றும் இக்கருத்துகள் ஆங்கிலத்தில் கீச்சுகளாக.

இங்கே, பெண்கள் அனைவருக்கும் பொதுவாக, நீங்கள் உடற்பாகங்களைக் காட்டும்படி ஆடையணிந்தால் ஆண்களுக்கு சிக்னல் தருகிறீர்கள். அதைக் கண்டு அவர்கள் உங்களை அணுகும்போது மறுக்கிறீர்கள். நீங்கள் தரும் சிக்னலுக்கு நீங்கள் பொறுப்பேற்கவேண்டும் என அவர் கூறுவதையெல்லாம் சேர்த்தால் இன்னும் பக்கங்கள் நீளும்.

One thought on “மருத்துவர் ஷாலினியின் திருநர் வெறுப்பும், போலி அறிவியலும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s